வால்பாறையில் பலத்த காற்றுடன் கனமழை


வால்பாறையில் பலத்த காற்றுடன் கனமழை
x
தினத்தந்தி 14 Jun 2021 11:39 PM IST (Updated: 14 Jun 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதுடன் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

வால்பாறை

வால்பாறையில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதுடன் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 

பலத்த காற்றுடன் கனமழை 

வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில்  மாலை 5 மணியில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. 

இந்த மழை நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழையாக பெய்தது. விடிய விடிய மழை கொட்டித்தீர்த்ததால், இங்குள்ள நீர்நிலை களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

மழை காரணமாக வால்பாறை பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் அக்காமலை தடுப்பணை நிரம்பி வழிந்தது.
 
54 அடியை எட்டியது 

இந்த தண்ணீர் கருமலை ஆற்றில் கலந்து பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அதுபோன்று சின்னக்கல்லார் அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், அணையில் இருந்து சுரங்க கால்வாய் வழியாக 748 கனஅடி தண்ணீர் சோலையார் அணைக்கு திறந்து விடப்பட்டது. 

இதேபோல் கருமலை இறைச்சல் பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. 

ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் பாய்ந்தோடும் தண்ணீர் முழுவதும் சோலையார் அணைக்கு செல்வதால், அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 3 அடி உயர்ந்து 54 அடியை எட்டி உள்ளது. 

தற்போது அணைக்கு வினாடிக்கு 960 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பரம்பிக் குளம் அணைக்கு 429 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. 

கடும் குளிர் 

மேலும் கனமழை காரணமாக வால்பாறை பகுதி முழுவதும் கடுமையான குளிர் மற்றும் பனிமூட்டமும் நிலவி வருகிறது. 

மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மழையில் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் பைகளை தலையில் போட்டபடி தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 அதுபோன்று பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது. பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டர்) வருமாறு:-

சோலையார் 40 மி.மீ., பரம்பிக்குளம் 17, ஆழியாறு 7.6., வால்பாறை 46, மேல்நீராறு 81., கீழ்நீராறு 60., காடம்பாறை 13, சர்க்கார்பதி 10, வேட்டைக்காரன்புதூர் 23.2, அப்பர் ஆழியாறு 1, நவமலை 1, பொள்ளாச்சி 22 மி.மீ. மழை பெய்தது.

கோவையில் மழை

கோவையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. காலையிலேயே மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் பலரும் ரெயின்கோட் அணிந்து சென்றனர். சிலர் குடை பிடித்தபடி நடந்து சென்றனர். இரவு வரை மழை லேசாக மழை பெய்து கொண்டு இருந்தது.

இது குறித்து வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறுகையில், கோவையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. 

இந்த மாதம் மழை தீவிரமடைய வாய்ப்பில்லை. அடுத்த மாதத்தில்தான் தீவிர மழை பெய்யும். அதுவரை காற்றுடன் லேசான மழை மட்டும் பெய்யும். கோவையில்  5 மில்லி மீட்டர் மழை பெய்தது என்றார்.


Next Story