நாமக்கல்லில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் சாலைமறியலில் ஈடுபட முயற்சி-போலீசாருடன், பொதுமக்கள் வாக்குவாதம்


நாமக்கல்லில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் சாலைமறியலில் ஈடுபட முயற்சி-போலீசாருடன், பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 14 Jun 2021 11:44 PM IST (Updated: 14 Jun 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். மேலும் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:
கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் சற்று அதிகமாக இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி கடந்த 2 நாட்களாக அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 72 இடங்களில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
நாமக்கல் நகரில் கோட்டை சாலையில் உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதற்கிடையே நேற்று காலையில் தடுப்பூசி செலுத்தி கொள்ள 100-க்கும் மேற்பட்டோர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தனர்.
சாலைமறியலில் ஈடுபட முயற்சி
ஆனால் அங்கு தற்சமயம் தடுப்பூசி இருப்பு இல்லை என அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்தும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த நாமக்கல் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கடந்த 2 நாட்களாக இங்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இன்று (நேற்று) நடைபெறுமா? இல்லையா? என முன்கூட்டியே மாவட்ட நிர்வாகமோ, சுகாதாரத்துறை அதிகாரிகளோ முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. எனவே தான் தடுப்பூசி போடப்படும் என நம்பி இங்கு வந்தோம் என கூறி, அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

Next Story