வெண்ணந்தூரில், கடந்த ஒரு மாதத்தில் ரூ.10 கோடி ஜவுளிகள் விசைத்தறி கூடங்களில் தேக்கம்-ஊரடங்கு, நூல் விலை உயர்வால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
வெண்ணந்தூரில் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் கடந்த ஒரு மாதத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெண்ணந்தூர்:
விசைத்தறிகள்
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக விசைத்தறி தொழில் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை உள்பட 10 மாவட்டங்களில் இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலில் சுமார் 30 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் தற்போது நூல் விலை உயர்வு காரணமாக கூடுதலாக அவதியடைந்து வருகிறார்கள்.
ஊரடங்கு
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பரவலின் வேகம் குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு விசைத்தறி கூடங்கள் செயல்பட ஆரம்பித்தன. இதனிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரதாண்டவத்தையடுத்து மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இதேபோல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, ஜவுளி நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் உற்பத்தி செய்த துணிகளை வெளியிடங்களுக்கு அனுப்பி விற்பனை செய்ய முடியாமலும், புதிய துணிகளை நெசவு செய்ய முடியாமலும் வெண்ணந்தூர் பகுதி நெசவாளர்கள் தவித்து வருகின்றனர்.
நூல் விலை உயர்வு
விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளதால், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பல லட்சம் மதிப்பிலான துணிகள் விசைத்தறி கூடங்களில் தேக்கமடைந்துள்ளன. மேலும், இந்த தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நூல் விலை உயர்வும் விசைத்தறி தொழிலாளர்களை மேலும் பாதித்துள்ளது. எனவே விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story