நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்-விண்ணப்பங்களை வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்


நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்-விண்ணப்பங்களை வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்
x
தினத்தந்தி 14 Jun 2021 11:44 PM IST (Updated: 14 Jun 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பிளஸ்-1 மாணவர் சேர்க்கை பிற்பகலுக்கு மேல் திடீரென நிறுத்தப்பட்டது. தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை வாங்கி கொண்டு மாணவ, மாணவிகளை அனுப்பி வைத்தனர்.

நாமக்கல்:
தேர்வுகள் ரத்து
கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்-அப் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. பிளஸ் -2 உள்ளிட்ட அனைத்து விதமான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்து வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களை பொறுத்த வரையில், அவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 வகுப்பில் சேர்க்கப்படுவார்கள் என அரசு அறிவித்து உள்ளது.
இதற்கிடையே இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளதால், பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது. மேலும் பாடங்களை இணையதளம் மூலம் நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
மாணவர் சேர்க்கை
அதன்படி நேற்று தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நேற்று பிளஸ்-1 மாணவர் சேர்க்கை காலையில் தொடங்கியது. பெற்றோர் ஆர்வமுடன், தங்களது மகன், மகள்களை பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
முன்னதாக பள்ளி வளாகங்கள் முழுவதிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டன. மாணவ, மாணவிகள் காய்ச்சல் பரிசோதனை செய்து, கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே சமூக இடைவெளியுடன் நிறுத்தப்பட்டனர். இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று பிற்பகலுக்கு மேல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் உத்தரவை அடுத்து திடீரென மாணவ, மாணவிகள் சேர்க்கை நிறுத்தப்பட்டது.
விண்ணப்பம் பெறப்பட்டது
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:-
பிளஸ்-1 மாணவர் சேர்க்கையை தொடங்க, ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என அரசு திடீரென அறிவித்து உள்ளது.
அந்த 11 மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டமும் உள்ளதால், நேற்று மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை. ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த பெற்றோர்களிடம் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன. அரசு அறிவுறுத்திய பின்னர், மாணவர் சேர்க்கை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story