டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது


டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 14 Jun 2021 11:49 PM IST (Updated: 14 Jun 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

முழுஊரடங்கு காரணமாக 35 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்கி செல்ல மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

வேலூர்-

டாஸ்மாக் கடைகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாதம் 10-ந்தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தற்போது தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வேலூர், திருப்பத்தூர் டாஸ்மாக் கோட்டத்தில் உள்ள 116 டாஸ்மாக் கடைகளின் முன்பு சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க குறிப்பிட்ட இடைவெளியில் வட்டம் வரையவும், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி மது, பீர் வகைளை விற்பனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

அலைமோதிய மதுபிரியர்கள்

இந்த நிலையில் 35 நாட்களுக்கு பின்னர் நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டன. சில கடைகளில் சாம்பிராணி புகை போட்டும், கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து விற்பனை தொடங்கப்பட்டது. காலை 9 மணி முதல் டாஸ்மாக் கடைக்கு மதுபிரியர்கள் வரத்தொடங்கினார்கள்.

 டாஸ்மாக் ஊழியர்கள் வருவதற்கு முன்பே பல கடைகளின் அருகே மதுபிரியர்கள் குவிந்திருந்தனர். கடைகளின் முன்பு கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு சில அடி தூரத்தில் சாமியானா பந்தல் அமைத்து போலீசார் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வைத்தனர். அவர்களுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் டோக்கன் வழங்கினர்.

டோக்கன்படி 5 பேர் வீதம் டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபானங்கள் வாங்கி சென்றனர். பெரும்பாலானோர் வெகுநாட்களுக்கு பின்னர் மதுபானங்களை வாங்கிய உற்சாகத்தில் அதனை முத்தமிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். மதிய வேளையில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மாலை 3 மணிக்கு பின்னர் பல கடைகளில் கூட்டம் அலைமோதியது.

தேங்காய் உடைத்து பூஜை

காட்பாடியில் வள்ளிமலை ரோட்டில் நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டவுடன் மதுப்பிரியர் ஒருவர் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை செய்தார்.
பின்னர் மதுபானங்கள் வாங்க வந்த மதுப்பிரியர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

Next Story