சிறு குறு விசைத்தறிகளை இயக்க அனுமதிக்க வேண்டும் மு க ஸ்டாலினுக்கு கோரிக்கை
சிறு, குறு விசைத்தறிகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசைத்தறி யாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சுல்தான்பேட்டை
சிறு, குறு விசைத்தறிகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசைத்தறி யாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மு.க.ஸ்டாலினுக்கு மனு
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி மளிகை மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
2½ லட்சம் விசைத்தறிகள்
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறி கள் உள்ளன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வாழ்வாதாரம் பெற்று வருகிறார்கள்.
இதில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் கூலி அடிப்படையில் இயங்கி வருகின்றன. ஒப்பந்த கூலி கிடைக்காமை, வங்கி கடன் நெருக்கடி, பாவு நூல் கிடைக்காமை என்று விசைத்தறியாளர்கள் பல்வேறு சிக்கலில் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா காரணமாக விசைத்தறி யாளர்கள் பெரும் சிரமத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
தொழிலாளர்கள் தவிப்பு
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், விசைத்தறியாளர்கள் தாங்களாகவே முன்வந்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், விசைத்தறிகள் இயக்குவதை நிறுத்தி வைத்து உள்ளனர்.
தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு காரணமாக விசைத்தறி தொழில் ஒரு மாதத்துக்கும் மேல் முடங்கிய நிலையில் உள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
விசைத்தறி தொழிலானது பிற தொழிற்சாலைகளை போல் அல்லாமல் மிக குறைத்த ஆட்களை கொண்டு இயக்கப்படும் சிறு, குறு தொழில் ஆகும்.
அனுமதிக்க வேண்டும்
உதாரணமாக 1000 சதுர அடி கொண்ட தொழிற்சாலையில் ஒரே நேரத்தில் 2 முதல் 3 தொழிலாளர்கள் மட்டுமே அதிக பட்சம் வேலை செய்வார்கள். இதில், சமூக இடைவெளி எப்போதும் பின்பற்றப் படுகிறது.
எனவே பல லட்சம் பேருக்கு வாய்ப்பளிக்கும் இந்த சிறு, குறு விசைத்தறிகளை முகக்கவசம் மற்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இயக்க அனுமதி அளிக்க வேண்டும்.
நிவாரணம் வழங்க வேண்டும்
மேலும், செவ்வாய்க் கிழமை மின்கட்டணம் செலுத்த கடைசி நாளாக உள்ளது. ஊரடங்கால் விசைத்தறியாளர்கள் சிரமப்பட்டு வருவதால், மின்கட்டணத்தை 3 தவணைகளாக பிரித்து அபராதம் இல்லாமல் கட்ட அனுமதிக்க வேண்டும்.
மேலும் வாழ்வாதாரம் பாதித்து உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் விசைத்தறியாளர் களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story