கண் தான முடிவை கண்டுகொள்ளாத அவலம்
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்த நெசவு தொழிலாளியின் கண்களை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தும் அதனை கண்டுகொள்ளாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,ஜூன்
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்த நெசவு தொழிலாளியின் கண்களை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தும் அதனை கண்டுகொள்ளாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நெசவு தொழிலாளி
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 54). நெசவுத்தொழிலாளியான இவர் சிறுநீரக பாதிப்பால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென்று இறந்துவிட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் அவரின் மகன் நாராயண செல்வம் (25) 2 மணி நேரத்தில் வந்துவிடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால், ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் அவரின் தாய் கற்பகவள்ளியிடம் கையெழுத்து வாங்கி பிணவறையில் உடலை வைத்து விட்டார்களாம்.
நள்ளிரவு 2 மணி அளவில் வந்த நாராயண செல்வம் தனது தந்தை கண் தானம் செய்ய விரும்பினார் என்றும், அவர் இறந்தாலும் அவரின் கண்களாவது ஒளி தரட்டும் என்றும் கூறி கண்தானம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால், அதற்கு அங்கிருந்தவர்கள் கண்தானம் செய்வதற்கு முன்னரே பதிவு செய்ய வேண்டும், அதற்கான நடைமுறைகள் இந்த நேரத்தில் மேற்கொள்ள முடியாது என்று கைவிரித்து விட்டார்களாம். அவர் எவ்வளவோ வற்புறுத்தியும் ஆஸ்பத்திரியில் இரவில் இருந்தவர்கள் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
ஒத்துழைக்க வில்லை
இதுகுறித்து நாராயண செல்வம் கூறுகையில், “எனது தந்தையின் கண்களை தானம் செய்ய முன்வந்தபோது தற்போது இந்த ஆஸ்பத்திரியில் அதற்கான வசதி இல்லை என்று கூறி யாரும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. உடலை தரவும் காலதாமதம் ெசய்துவிட்டனர். எனது தந்தை மறைந்து விட்டாலும், அவரது கண்களாவது 2 பேருக்கு ஒளிதரட்டும் என்று எண்ணி இரவில் மன்றாடினேன். யாரும் கண்டுகொள்ளவில்லை.” என்றார்.
இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அல்லியிடம் கேட்டபோது, “ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கண் சிகிச்சை பிரிவு, பல்நோக்கு சிகிச்சை பிரிவு ஆகியவை கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது இங்குள்ள கொரோனா நோயாளிகளை ஆண்கள் மருத்துவ பிரிவு வார்டில் மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் பின்னர் மேற்கண்ட 2 பிரிவுகளும் செயல்பட தொடங்கும். கண்தானம் செய்ய முன் வந்தும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படும் புகார் குறித்து விசாரிக்கப்படும். தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.
Related Tags :
Next Story