பிளஸ்-1, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை தொடங்கியது
பிளஸ்-1, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. விரும்பும் பாடப்பிரிவு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
விருதுநகர்,
பிளஸ்-1, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. விரும்பும் பாடப்பிரிவு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மாணவர் சேர்க்கை
கடந்த கல்வியாண்டில் தமிழக அரசு கொரோனா தொற்று காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி வழங்கியுள்ளது.
இதனால் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாத நிலை உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு வரும் கல்வியாண்டிற்கு பிளஸ்-1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கான வழி காட்டுதல் ஏதும் வழங்கப்படாத நிலையில், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
தொடங்கியது
இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் முறையில் ஏற்கனவே மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு விட்ட நிலையில் நேற்று மாணவர்கள் நேரடியாக வந்து வகுப்புகளில் அனுமதி பெற்றனர்.
பிளஸ்-1 மாணவர் சேர்க்கையில் மதிப்பெண்கள் எதையும் கணக்கில் எடுக்காமல் மாணவ-மாணவிகள் விரும்பும் பிரிவினை வழங்கும் நிலை இருந்தது. விருதுநகரில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 50 மாணவிகள் 3 பாடப்பிரிவுகளில் சேர்ந்தனர்.
விருப்பம்
இதுபற்றி பள்ளி உதவி தலைமை ஆசிரியை சாந்தா கூறுகையில், பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்த அனைத்து மாணவிகளும் எங்கள் பள்ளியில் படித்த மாணவிகள். எனவே அவர்கள் விரும்பும் பாடப்பிரிவினை நாங்கள் வழங்கியுள்ளோம். தொடர்ந்து பிளஸ்-1 வகுப்பில் சேர்வதற்கு வரும் மாணவிகளுக்கு அவர்கள் விருப்பப்படி பாடப்பிரிவை வழங்கி நிபந்தனைகள் இல்லாமல் சேர்க்கப்படுவார்கள் என கூறினார்.
இதேபோன்று தனியார் பள்ளிகளில் மாணவ- மாணவிகள் விரும்பும் பாடப்பிரிவு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
தகவல் இல்லை
இந்நிலையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை பிளஸ்-1 மாணவர் சேர்க்கை குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலை இருந்தது.
ஆனால் பெற்றோர் அரசு அறிவிப்பின் அடிப்படையில் தாங்களாகவே தாங்கள் விரும்பும் பள்ளிக்கு சென்று தங்கள் குழந்தைகளை பிளஸ்-1 வகுப்புகளில் விரும்பும் பாடப்பிரிவில் சேர்த்தனர். மாவட்ட பள்ளிக்கல்வித்துறை இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினருக்கோ பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கோ எவ்வித வழிகாட்டல்களும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
எனினும் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவில் பிளஸ்-1 வகுப்புகளில் சேர்ந்தனர். தொடர்ந்து இன்றும் பிளஸ்-1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கூறப்படுகிறது.
பாலிடெக்னிக் கல்லூரி
மாவட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
ஐ.டி.ஐ. குறித்து எவ்வித தகவலும் வராத நிலையில் மாணவர் சேர்க்கைக்கு யாரும் வரவில்லை. பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்ட நிலையில் தமிழக அரசு தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்புக்கான கல்வி கட்டணத்தை வரைமுறைப்படுத்தி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story