நெல்லையில் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லையில் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் சிமெண்டு, ஜல்லி, மணல் ஆகியவற்றுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சிமெண்டு, கல், மணல், செங்கல் போன்றவற்றின் விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நெல்லை மாவட்ட செயலாளர் பிரேம்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்து மகாசபா
அகில பாரத இந்து மகாசபாவினர் துணைத்தலைவர் கேப்டன் கணேசன் தொழிற்சங்க தலைவர் கனியப்பன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகம் வந்து, தங்க நகை பட்டறைகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திராவிட தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தூய்மை பணியாளர்களையும் முன்கள பணியாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மாவட்ட செய்தி தொடர்பாளர் முத்துவளவன் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழக அரசு உடனடியாக மதுபான கடைகளையும், மது ஆலைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் போட்டார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மதுக்கடைகளை மூடக் கோரி மனு கொடுத்தார்.
Related Tags :
Next Story