அதிகாரிகள் வந்த வாகனத்தை மறித்து விவசாயிகள் போராட்டம்
பூதலூர் அருகே வயல்களில் பெட்ரோல் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் வந்த வாகனத்தை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் அருகே வயல்களில் பெட்ரோல் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் வந்த வாகனத்தை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகனத்தை மறித்து போராட்டம்
நாகை மாவட்டம் நரிமணத்தில் இருந்து திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பூதலூர் அருகே உள்ள வெண்டயம்பட்டி கிராம பகுதிகளில் விவசாய விளைநிலங்கள் வழியே குழாய் பதிக்கும் பணியில் வருவாய்த்துறை, போலீசார் உதவியுடன் ஐ.ஓ.சி.எல். நிர்வாகத்தினர் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெண்டையம்பட்டி, ராயமுண்டான்பட்டி, நவலூர், சுரக்குடிப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் குழாய் பதிக்க வந்த அதிகாரிகள் வாகனத்தை வெண்டயம்பட்டி சாலையில் மறித்து போராட்டம் நடத்தினர்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பூதலூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் உதவி கலெக்டர் ரவிக்கண்ணன், பூதலூர் தாசில்தார் ராமச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமானந்தம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன துணை பொது மேலாளர் எம்.ஜி.ஜாய் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ ்சந்திரபோஸ் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் புதிதாக பொறுப்பேற்கும் தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் பிரச்சினை குறித்து பேசுவது எனவும், அதுவரை குழாய் பதிக்கும் பணிகள் நிறுத்தம் செய்வதாகவும் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story