டாஸ்மாக் கடைகள் திறப்பு
35 நாட்களுக்கு பிறகு பெரம்பலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச்சென்றனர்.
பெரம்பலூர்:
டாஸ்மாக் கடைகள் திறப்பு
கொரோனா வைரஸ் 2-ம் அலை பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் மீண்டும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 36 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் மது கிடைக்காமல் மது பிரியர்கள் திண்டாடி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் முன்னேற்பாடு பணிகளாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் மது பிரியர்கள் சமூக இடைவெளி பின்பற்றுவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு, வட்டம் போடப்பட்டிருந்தது. 35 நாட்களுக்கு பிறகு நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் உற்சாகத்தில் இருந்தனர். காலை 10 மணிக்கு முன்னதாகவே டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்து கூடினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஊர்க்காவல் படையினர் அவர்களை சமூக இடைவெளி விட்டு வட்டத்தில் நிற்குமாறு அறிவுறுத்தினர்.
கால் கடுக்க காத்திருந்து...
சரியாக காலை 10 மணியளவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்களின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. இதையடுத்து வரிசையாக சென்று மது பிரியர்கள் தேவையான அளவு மது பாட்டில்களை வாங்கி சென்றனர். அவர்களில் சிலர் மது பாட்டில்களுக்கு முத்தம் கொடுத்தும், கையெடுத்து கும்பிட்டும் எடுத்து சென்றனர். முககவசம் அணிந்து வந்தவருக்கு மட்டும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.
நேரம் செல்ல செல்ல டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் சாரை, சாரையாய் வந்து கூடினர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று கால் கடுக்க காத்திருந்து மது பாட்டில்களை வாங்கி சென்றனர். அவர்களை சமூக இடைவெளியை நிற்குமாறு மைக் மூலம் ஒலிபெருக்கியில் அவ்வப்போது டாஸ்மாக் கடை ஊழியர்கள் அறிவுறுத்தி வந்தனர். மேலும் மது பாட்டில்களை வாங்கிய மது பிரியர்கள் இன்முகத்துடன் வீட்டிற்கு சென்றனர். சில டாஸ்மாக் கடைகளில் மதியத்திற்குள் மது பாட்டில்கள் விற்று தீர்ந்தது.
குன்னம்
குன்னம் பகுதியில் குன்னம், பேரளி, வேப்பூர், நல்லரிக்கை, மேலமாத்தூர் ஆகிய கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களுக்காக சாமியான பந்தல் அமைக்கப்பட்டும், குறிப்பிட்ட இடைவெளி மத்தியில் வட்டம் போடப்படும், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு டோக்கன் முறையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலான கடைகளில் கடை திறக்கப்பட்ட காலை வேளையில் கடைகளில் கையிருப்பு இருந்த விலை உயர்ந்த மது பாட்டில்களங விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஆர்வமுடன் வந்த மது பிரியர்கள் தாங்கள் ரூ.120-க்கு வழக்கமாக வாங்கி குடிக்கும் மது பாட்டில்கள் கிடைக்காமல் திண்டாடினர்.
இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டமும் வெகுவாக குறைந்தது. சிலர் ரூ.220-க்கு விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை வாங்கிச் சென்று கொண்டாடினர். மேலும் பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு மணி, மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் ரவீந்தர் ஆகியோர் குன்னம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளில் அரசு விதிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டு உள்ளனவா என்று ஆய்வு செய்தனர். பின்னர் மாலை 3 மணிக்கு மேல் மலிவு விலை மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிட்ட தக்கது.
மங்களமேடு
மங்களமேடு பகுதியில் அகரம் சீகூர், பெருமத்தூர், எறையூர், வாலிகண்டபுரம் ஊராட்சிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள், மதுபிரியர்களின் கைகளில் கிருமி நாசினி தெளித்து கைகளை சுத்தம் செய்த பின், மதுப் பிரியர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். மது பிரியர்கள் வரிசையில் நிற்பதை பார்த்த அந்த வழியாக சென்ற பெண்கள், கோவிலில் வழிபட வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து கோவில்களை திறப்பதற்கு வழி செய்தால் நன்றாக இருக்கும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட தங்களுடைய கணவர்களை மது அருந்தாமல் எப்படி தடுப்பது என்று தெரியவில்லை என்றும் பேசிக்கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story