குமரியில் டாஸ்மாக் கடைகள் திறந்ததால் மதுபிரியர்கள் உற்சாகம்


குமரியில் டாஸ்மாக் கடைகள் திறந்ததால் மதுபிரியர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 15 Jun 2021 2:19 AM IST (Updated: 15 Jun 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில், ஜூன்.15- குமரி மாவட்டத்தில் 35 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். மதுக்கடைகள் முன் குடிமகன்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 35 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். மதுக்கடைகள் முன் குடிமகன்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
மதுக்கடைகள் திறப்பு
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து குமரி உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் 35 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
பெரும்பாலான இடங்களில் மதுக்கடை திறப்பதற்கு முன்பாகவே குடிமகன்கள் கடைக்கு சென்று காத்திருந்தனர். இளங்கடை பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை திறந்ததும் அப்பகுதி இளைஞர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதே போல அகஸ்தீஸ்வரம் பகுதியிலும் மதுக்கடைக்கு குடிமக்கள் ஆரத்தி எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 
கொல்லங்கோடு
தமிழக- கேரள எல்லையான கொல்லங்கோடு அடுத்த ஊரம்பு, கண்ணனாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 மதுக்கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த மதுபிரியர்கள் நடைக்காவு பகுதியில் உள்ள மதுக்கடைக்கு படையெடுத்து வந்தனர். முன்னதாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை மதுக்கடையின் அருகே உள்ள ஒரு மைதானத்தில் வரிசையாக நிற்க வைத்து கடை ஊழியர்கள் மூலம் டோக்கன்கள் வழங்கி வரிசையாக மதுக்கடைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) கணேசன் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
புதுக்கடை பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும் புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
சமூக இடைவெளி
மதுக்கடைகளில் அரசு உத்தரவுபடி யாருக்கும் மொத்தமாக மதுபாட்டில்கள்  விற்கப்படவில்லை. மேலும் மது வாங்க வருவோர் 6 அடி சமூக  இடைவெளியை பின்பற்றி மதுபானம் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக தடுப்புவேலி அமைக்கப்பட்டு அதில் வட்டம் போடப்பட்டு இருந்தது. அந்த வட்டத்தில் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.
மேலும் மதுக்கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அனைத்து மதுக்கடைகளிலும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றினர். மேலும் ஒரு சில இடங்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக குடைபிடித்து நின்றனர். சில இடங்களில் சுமார் 500 மீட்டர் நீளத்துக்கும், மேலும் சில இடங்களில் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கும் மது பிரியர்கள் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர். 

Next Story