கடைக்கோடி கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை


கடைக்கோடி கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Jun 2021 3:21 AM IST (Updated: 15 Jun 2021 3:21 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கடைக்கோடி கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2 அமைச்சர்கள் தெரிவித்தனர்

திருச்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2008-09-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கடந்த 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 3,163 ஊரக குடியிருப்புகளுக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் (2036-ம் ஆண்டு) குடிநீர் வழங்க சுமார் ரூ.616 கோடி மதிப்பில் 19.76 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் அமலாக்கப்பட்டது. இத்திட்டத்தினை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் தொடர் நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில் நான்கு நீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டு அவற்றிலிருந்து தண்ணீரானது, 448 கிலோ மீட்டர் நீளமுள்ள நீரேற்றுக் குழாய்கள் மற்றும் புவி ஈர்ப்புக் குழாய்கள் மூலம் 119 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளுக்கும், 601 மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு 198 கிலோ மீட்டர் நீளமுள்ள பகிர்மானக் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலுள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 2006-2011-ம் ஆண்டு ஆட்சியின்போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் அமலாக்கப்பட்ட இந்த உன்னத திட்டம் தற்போது சாலை விரிவுப்படுத்துதல் பணிகள், முறையற்ற இணைப்புகள், குழாய்களில் ஏற்படும் உடைப்பு மற்றும் வெடிப்பு போன்ற காரணங்களினால் கடைக்கோடி கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் ஆகாமல் தடைபட்டது.
அதனை உடனே சரிசெய்து முறையான வினியோகம் ஏற்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதற்கேற்ப புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நேற்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் திருச்சி முத்தரசநல்லூர் காவிரி ஆற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறுகையில், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனரும், தமிழ்நாடு ஜல் ஜீவன் மிஷன் திட்ட இயக்குனருமான டாக்டர் மகேஸ்வரன் தலைமையில் குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், நிலநீர் வல்லுனர்கள் மற்றும் நீர் பகுப்பாய்வாளர்கள் என 152 பேர் கொண்ட 52 சிறப்பு ஆய்வுக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளது. அக்குழுவானது புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்றும், இன்றும் கள ஆய்வு மேற்கொள்வதாக தெரிவித்தார்.
பின்னர் இரு அமைச்சர்களும் கூறுகையில், இச்சிறப்பு ஆய்வுக் குழுக்கள் திட்ட உருவாக்க அறிக்கையின்படி வடிவமைக்கப்பட்ட குடிநீர் அளவு அனைத்து தரைநிலை, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கும் செல்வது, குடிநீரின் தரம், நீரேற்று இடைவெளிகள், ஆகியவற்றின் நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தவும், குடிநீர் வழங்கல் குறித்து சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம் நேரடி தொடர்பு கொள்கின்றனர்.
சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை
எனவே, பொதுமக்கள் குடிநீர் சம்பந்தப்பட்ட குறைகள் ஏதேனும் இருப்பின், அதனை தங்கள் குடியிருப்புக்கு அருகில் வரும் சிறப்பு ஆய்வுக் குழு அலுவலரிடம் நேரடியாக அல்லது இச்சிறப்பு ஆய்வுக் குழுவின் சிவகங்கை மாவட்டத்தில் இந்த இரு தினங்களுக்கு மட்டும் செயல்படும் கண்காணிப்பு குழுவிடம் 04575-240481 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், இச்சிறப்பு ஆய்வுக் குழுக்களின் விரிவான ஆய்வறிக்கையினை கள ஆய்வாளர்கள் மதுரை மண்டல தலைமை பொறியாளர் மணிமோகனால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படும் ஆய்வுக்கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளனர். இந்தஅறிக்கையின் அடிப்படையில், இக்கூட்டு குடிநீர் திட்டத்திலுள்ள அனைத்து கடைக்கோடி கிராமங்களுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.

Next Story