கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் அத்தியாவசிய கடைகள் திறப்பு
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறக்கப்பட்டன.
கூடலூர்
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறக்கப்பட்டன.
முழு ஊரடங்கு கடைபிடிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 7-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கோவை, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
மீதம் உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் பகுதிகளில் மாலை 5 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறந்து இருந்தது.
ஆனால் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாகள் மற்றும் மசினகுடி, நடுவட்டம் பகுதியில் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதால் அத்தியாவசிய கடைகளும் திறக்கப்படவில்லை.
தொடர்ந்து முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட நடமாடும் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்பட்டது.
அத்தியாவசிய கடைகள் திறப்பு
இந்த நிலையில் நேற்று முதல் நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகளுடன், கூடுதல் வணிக செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் புதிய உத்தரவை பின்பற்றி அத்தியாவசிய கடைகள் மற்றும் கட்டிட பராமரிப்பு பணி, வேளாண் உபகரணங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் திறக்கப்பட்டது.
இதேபோல் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் மற்றும் மசினகுடி பகுதியில் நேற்று அத்தியாவசிய கடைகளுடன் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி பிற வணிக நிறுவனங்களும் திறக்கப்பட்டது. 20 நாட்களுக்கு பிறகு அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டதால், பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
மேலும் கடந்த சில வாரங்களாக வெறிச்சோடி காணப்பட்ட சாலைகளில் வாகன போக்குவரத்தும் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் மதியம் 1 மணி வரை மட்டுமே அனைத்து வணிக நிறுவனங்களும் செயல்படும் என கூடலூர், பந்தலூர் தாலுகா வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story