மது அருந்தும் தகராறில் வாலிபர் கொடூர கொலை - 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
மது அருந்தும் தகராறில் வாலிபரை கொடூரமாக அடித்துக்கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்.
ஆவடி,
ஆவடியை அடுத்த பட்டாபிராம் உழைப்பாளர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 24). இவர், தனது நண்பரான நாகராஜ் என்பவருடன் நேற்று மாலை காந்தி நகர் அருகே உள்ள ஏரிக்கரையோரம் மது அருந்தினார்.
அப்போது இவர்களுக்கும், அங்கு ஏற்கனவே மது அருந்தி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், பிரசாந்தை தாக்க முயன்றனர்.
இதனால் பிரசாந்த், நாகராஜ் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் இருவரையும் விரட்டிச்சென்றனர். காந்தி நகர், பாரதமாதா தெருவில் அந்த கும்பல் இருவரையும் மடக்கி தாக்கினர். இதில் தலை, கண் பகுதியில் காயம் அடைந்த நாகராஜ், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அந்த கும்பல் பிரசாந்தை சுற்றி வளைத்து பீர் பாட்டில், தென்னை மட்டை, கற்கள் ஆகியவற்றால் சரமாரியாக தாக்கினர். அத்துடன் பிரசாந்தின் தொண்டையில் அழுத்தி, சுவரில் பிடித்து தள்ளினர். இதில் அவரது பின்னந்தலை சுவரில் மோதியதில் படுகாயம் அடைந்து பிரசாந்த் மயங்கி விழுந்தார்.
ஆனாலும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல், பிரசாந்த் மீது ஏறி அமர்ந்து அவரது மார்பு பகுதியில் கல்லால் குத்தியதுடன், அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து பிரசாந்த் தலையில் போட்டு அவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன், பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார் கொலையான பிரசாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனர் தீபா கனிக்கர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரனை மேற்கொண்டார். மேலும் தலைமறைவாக உள்ள கொலையாளிகளை பிடிக்க உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொலையாளிகளை பிடித்த பின்னர் தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கொலையான பிரசாந்த் மீது ஏற்கனவே பட்டாபிராம் போலீசில் குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story