மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை கமிஷனர் ஆய்வு
அம்பத்தூர், வில்லிவாக்கம், தியாகராயநகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர் ஏரி மற்றும் கொரட்டூர் பகுதிகளில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் குடியிருப்பு பகுதிகளில் கடந்த காலங்களில் அதிகப்படியான தண்ணீர் தேக்கம் இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வேக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சியின் முயற்சியால் இலவசமாக பெற்று அங்கு 1,200 மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதன் அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் குட்டை போன்று நீர் தேங்கி அதில் பாசிகள் படர்ந்திருப்பதை கண்டு அவற்றை உடனடியாக அகற்றி கொசுப்புழுக்கள் உருவாகாதவண்ணம் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளவும் மண்டல அலுவலருக்கு அவர் உத்தரவிட்டார்.
பின்னர், வில்லிவாக்கம் ஏரி புனரமைக்கும் பணியினையும் ஆய்வு செய்தார். இதையடுத்து, தேனாம்பேட்டை மண்டலம், தியாகராய நகர் பகுதி சார்ந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மாம்பலம் கால்வாய் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஜி.என்.செட்டி சாலையில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார். இந்த பணிகளை வருகின்ற ஆகஸ்டு மாதத்துக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், இந்த கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையிலும் இந்த பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, துணை கமிஷனர் எம்.எஸ்.பிரசாந்த் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story