ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வினியோகம்


ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வினியோகம்
x
தினத்தந்தி 15 Jun 2021 8:33 PM IST (Updated: 15 Jun 2021 8:33 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் 526 ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகையின் 2-வது தவணைத் தொகையான ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

தேனி: 


14 வகை மளிகை பொருட்கள்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த 3-ந்தேதியன்று கொரோனா பாதிப்பு நிவாரண உதவியாக 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள், கொரோனா நோய்த்தொற்று நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 2-வது தவணை ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்க வீடு, வீடாக சென்று அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. 

தேனி மாவட்டத்தில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 568 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது. 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பொதுமக்களுக்கு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. மாவட்டத்தில், 526 ரேஷன் கடைகளில் இந்த நிதி மற்றும் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வினியோகம் செய்யும் பணி நடந்தது.

மக்கள் மகிழ்ச்சி
இந்த நிவாரண தொகுப்பில் கோதுமை மாவு ஒரு கிலோ, ரவை ஒரு கிலோ, உப்பு ஒரு கிலோ, சர்க்கரை அரை கிலோ, உளுந்தம் பருப்பு அரை கிலோ, புளி 250 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், சீரகம், கடுகு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் தலா 100 கிராம், டீ தூள் 2 (100 கிராம்), குளியல் சோப்பு 1 (125 கிராம்) துணி சோப்பு 1 (250 கிராம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.


நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை வாங்குவதற்காக ரேஷன் கடைகளின் முன்பு மக்கள் வரிசையில் காத்திருந்தனர். அனைத்து ரேஷன் கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சில இடங்களில் சமூக இடைவெளியின்றி மக்கள் வரிசையில் நின்றனர். 

அவர்களை சமூக இடைவெளியுடன் நிற்க போலீசார் அறிவுறுத்தினர். நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகையை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.


அதிக அளவில் கூட்டம் கூடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே வழங்கப்பட்ட டோக்கன்களில் கடைக்கு வந்து பொருட்கள் வாங்க வேண்டிய நேரத்தை குறிப்பிட்டு கொடுக்கப்பட்டது. 

இதனால், மாவட்டத்தில் பல இடங்களில் ரேஷன் கடைகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. 

ஒவ்வொரு கடையிலும் 100 முதல் 150 டோக்கன்கள் வரை பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டதால் காலை நேரத்தில் கூட்டம் காணப்பட்டது. பகல் 12 மணியளவில் பெரும்பாலான ரேஷன் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தொடர்ந்து இவற்றை வழங்கும் பணி நடக்கிறது.


Next Story