ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி. 2 பேர் கவலைக்கிடம்


ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி. 2 பேர் கவலைக்கிடம்
x
தினத்தந்தி 15 Jun 2021 10:00 PM IST (Updated: 15 Jun 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலியானார். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆம்பூர்

விஷவாயு தாக்கியது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் தனியார் தோல் தொழிற்சாலை உள்ளது. இங்கு உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்திகரிக்கும் பணியில் புத்தூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (55), ரத்தினம் (60), மோதகப்பல்லி கிராமத்தை சேர்ந்த பிரசாத் (27) ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். ரமேஷ் தொட்டிக்குள் இறங்கி தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது விஷவாயு தாக்கியதில் அவர் தொட்டிக்குள்ளே மயக்கம் போட்டு விழுந்தார். அவரை காப்பாற்றுவதற்காக ரத்தினம் உள்ளே இறங்கினார். அவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இதை பார்த்த பிரசாத், அவர்கள் இருவரையும் காப்பாற்றுவதற்காக கூச்சல் போட்டபடியே தொட்டிக்குள் இறங்கினார். அவரும் விஷவாயு தாக்கி மயக்கம் போட்டு விழுந்தார்.
தொழிலாளி பலி

இதைப்பார்த்த சக தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கி 3 பேரையும் மீட்க முயன்றனர். அதற்குள்  ரமேசை இறந்துவிட்டார். மற்ற 2 பேரையும் உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ரத்தினம் மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 உறவினர்கள் வாக்குவாதம்

இறந்த ரமேஷ் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை வழங்க கோரியும் அவர்களுடைய உறவினர்கள், தோல்தொழிற்சாலை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, ஆம்பூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு சச்சிதானம் மற்றும் உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

பரபரப்பு
இந்த சம்பவம் தொடர்பாக உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story