உடுமலை பகுதியில் முட்டைகோஸ் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்


உடுமலை பகுதியில் முட்டைகோஸ் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 15 Jun 2021 10:03 PM IST (Updated: 15 Jun 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் முட்டைகோஸ் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

போடிப்பட்டி
உடுமலை பகுதியில் முட்டைகோஸ் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாற்றுப்பயிர் தேடல்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு வழக்கமாக தக்காளி, சின்ன வெங்காயம், கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த காய்கறிகளுக்கு அவ்வப்போது சரியான விலை கிடைக்காத நிலை ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் மாற்றுப் பயிர்கள் குறித்த தேடலில் ஈடுபட்டுள்ளனர். 
இந்தநிலையில் மலைப் பிரதேச காய்கறிகளான பீட்ரூட், காலிபிளவர், முள்ளங்கி, முட்டைகோஸ் போன்றவற்றை சமவெளிகளில் பயிரிடுவதில் தற்போது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதற்கு ஏற்றாற்போல சமவெளிகளில் அதிக மகசூல் தரக்கூடிய புதிய ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் தற்போது உடுமலை பகுதியில் ஒருசில விவசாயிகள் முட்டைகோஸ் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வடிகால் வசதி
மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய உடுமலை பகுதி கிராமங்களில் உள்ள குளிர்ந்த வானிலை முட்டைகோஸ் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. அதனடிப்படையில் தற்போது முட்டைகோஸ் சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். 
ஒரு ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி செய்ய 250 கிராம் விதைகள் போதுமானது. நாற்றங்கால் அமைத்து தொழு உரம், மண் புழு உரம் போன்றவற்றைப் போட்டு விதைப்படுக்கை அமைக்கிறோம். அதில் 10 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைகளை நடவு செய்ய வேண்டும். பின்னர் நாற்றுக்களைப் பிடுங்கி தயார்படுத்தப்பட்ட நிலத்தில் 40 செ.மீ இடைவெளியில் நடவு செய்கிறோம். முட்டைகோஸ் பயிரைப் பொறுத்தவரை மண்ணில் தொடர்ந்து ஈரப்பதம் இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும். அதேநேரத்தில் தண்ணீர் தேங்காத அளவுக்கு சிறந்த வடிகால் வசதி இருக்க வேண்டும். பொதுவாக முட்டைகோஸ் பயிரில் வெட்டுப் புழுக்கள், அஸ்வினிகள் தாக்குதல் இருக்கும். இதுதவிர இலைப் புள்ளி நோய், இலைக் கருகல் நோய், கருப்பு அழுகல் நோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படக் கூடும்.
எனவே அதற்கான மருந்துகள் குறித்து தோட்டக்கலைத்துறையினரின் பரிந்துரை பெற்று தெளிப்பது சிறந்தது. முட்டைகோஸை நடவு செய்த 75 நாளில் அறுவடை செய்யத் தொடங்கலாம். சுமார் 120 நாட்கள் வரை 8 முறை அறுவடை செய்யலாம். இதன்மூலம் ஒரு ஏக்கருக்கு 10 முதல் 14 டன் வரை மகசூல் கிடைக்கும். மலைப்பகுதிகளில் இதை விட 3 மடங்கு மகசூல் கிடைக்கும் என்றாலும் சமவெளியிலும் முட்டைகோஸ் சாகுபடி லாபகரமானதாகவே உள்ளது.
இவ்வாறு  விவசாயிகள் கூறினர்.

Next Story