அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி
தளி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ஆறு மற்றும் கால்வாயை ஆதாரமாகக் கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நெல்சாகுபடி
கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிர அடைந்தது. இதன் காரணமாக அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வந்தது. அதுமட்டுமின்றி அவ்வப்போது மழையும் பெய்து வந்தது. இதன் காரணமாக அணையின் நீர் இருப்பு 224 நாட்களாக 85 அடிக்கும் மேலாக நீடித்து வந்தது. அணைக்கு அதிகளவு நீர்வரத்து ஏற்படும் போது அதை உபரிநீராக மதகுகள் வழியாக வெளியேற்றியும் நீர்வரத்து குறையும்போது அதிகாரிகள் அணையில் தண்ணீரை தேக்கியும் வந்தனர்.
மேலும் பாசனத்திற்கு தேவையான போது மட்டும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் கோடை காலத்தில் கூட 70 அடிக்கு கீழாக நீர்இருப்பு குறையவில்லை. இதனால் இந்த முறை இரண்டு போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது பரவலாக நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.
நீர்வரத்து
இந்த சூழலில் கடந்த 2 நாட்களாக அமராவதி அணையின் நீர் ஆதாரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வானம் மேகமூட்டமாக காணப்படுவதால் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் பஞ்சலிங்க அருவியில் நீர் ஆதாரங்களில் பெரியளவில் மழை பெய்யவில்லை. இதனால் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்து சீராக இருந்து வருகிறது. அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடியாகும். நேற்றைய நிலவரப்படி அணையில் 74.51 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 974 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story