உடுமலையில் உள்ள ரேஷன்கடைகளில் நிவாரணத்தொகை14 வகை மளிகை பொருட்கள் வழங்குதல் தொடங்கியது


உடுமலையில் உள்ள ரேஷன்கடைகளில் நிவாரணத்தொகை14 வகை மளிகை பொருட்கள் வழங்குதல் தொடங்கியது
x
தினத்தந்தி 15 Jun 2021 10:13 PM IST (Updated: 15 Jun 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் உள்ள ரேஷன்கடைகளில் நிவாரணத்தொகை14 வகை மளிகை பொருட்கள் வழங்குதல் தொடங்கியது

உடுமலை
உடுமலையில் உள்ள ரேஷன்கடைகளில் 2-வது தவணைகொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குதல் நேற்று தொடங்கியது. பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நின்று வரிசையாக வாங்கி சென்றனர்.
14 வகை மளிகைப்பொருட்கள்
கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்றும், அத்துடன் 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பும் வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
 இதில் கொரோனா நிவாரணத்தொகை ரூ.4ஆயிரத்தில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் (மே) வழங்கப்பட்டது. இதில் 2-வது தவணை நிவாரணத்தொகை மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 3-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசை
இதைத்தொடர்ந்து ரேஷன் கடைகளில் 2-வது தவணை நிவாரணத்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் பைகளில் போட்டு வைக்கப்பட்டிருந்த 14 வகை மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நேற்று உடுமலை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் தொடங்கியது. உடுமலை தாலுகாவில் 127 முழு நேர ரேஷன் கடைகளும், 56 பகுதி நேர ரேஷன் கடைகளும் என மொத்தம் 183 ரேஷன் கடைகள் உள்ளன. அரிசி வாங்கும் ரேஷன் அட்டைகள் மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 30 உள்ளன. இந்த அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2-வது தவணைகொரோனா நிவாரணத்தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டிருந்ததால் ரேஷன் கடைகளில் கூட்டம் தவிர்க்கப்பட்டது. சிலர் காலை 7 மணிக்கே வந்து வரிசையில் நின்றிருந்தனர். அரிசி ரேஷன் அட்டைதார்கள் சமூக இடைவெளி விட்டுநீண்ட வரிசையாக நின்று நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை வாங்கி சென்றனர். ரேஷன்கடைகளில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கணக்கம்பாளையம் ஊராட்சி
உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் மொத்தம் 6 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகளில் 2-வது தவணைகொரோனா நிவாரணத்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகைப்பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கணக்கம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் லதா என்கிற காமாட்சி அய்யாவு தலைமை தாங்கினார்.
 நிவாரணத்தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை பொள்ளாச்சி தொகுதி  கு.சண்முகசுந்தரம் எம்.பி, மடத்துக்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தி.மு.க. உடுமலை வடக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினரும், கணக்கம்பாளையம் 12-வது வார்டு கவுன்சிலருமான எம்.அய்யாவு வரவேற்றார். ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க.நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story