திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உடுமலை பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள் நேற்று 2-வது நாளாக மது வாங்க குவிந்தனர்.


திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உடுமலை பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள் நேற்று 2-வது நாளாக மது வாங்க குவிந்தனர்.
x
தினத்தந்தி 15 Jun 2021 10:22 PM IST (Updated: 15 Jun 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உடுமலை பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள் நேற்று 2வது நாளாக மது வாங்க குவிந்தனர்.

போடிப்பட்டி
திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உடுமலை பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள் நேற்று 2-வது நாளாக மது வாங்க குவிந்தனர். அதேநேரம் கடை திறக்காததால் ஏமாற்றமடைந்தனர்.
கொரோனா அபாயம்
கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று குறையாத நிலையில் திண்டுக்கல் உள்பட 27 மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இதனால் கடை திறக்கப்படாத மாவட்டங்களிலிருந்து படையெடுத்த மதுப்பிரியர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட எல்லைகளில் போலீசார் திணறும் நிலை ஏற்பட்டது. 
மதுப்பிரியர்கள் கால்வாய்களில் இறங்கியும், அமராவதி ஆற்றைக் கடந்தும், கம்பி வேலிகளுக்குள் நுழைந்தும் பல்வேறு சாகசப் பயணங்கள் மேற்கொண்டு போலீசாரை ஏமாற்றி டாஸ்மாக்கில் குவிந்தனர். 
அந்த வகையில் திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள கொழுமம் சோதனை சாவடி மற்றும் சாமிநாதபுரம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளில் ஆயிரக்கணக்கானோர் நேற்று முன்தினம் குவிந்தனர். இதனால் நோய்த் தொற்று அதிகமுள்ள திருப்பூர் மாவட்டத்திலிருந்து தொற்று குறைந்த திண்டுக்கல் மாவட்டத்துக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
மதுப்பிரியர்கள் ஏமாற்றம்
இதனையடுத்து மாவட்ட எல்லைக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் அல்லது எல்லையிலிருந்து குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் தள்ளி மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர். இந்தநிலையில் 2-வது நாளான நேற்று மாவட்ட எல்லையிலுள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் கெடுபிடிகளை அதிகப்படுத்தினர்.
கடை திறக்கும் வரை கடைக்கு அருகில் யாரும் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் மதுப்பிரியர்கள் ஆங்காங்கே குவிந்து நின்றனர். நேற்று முன்தினம் மதுவகைகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்த நிலையில் சாமிநாதபுரம் மதுக்கடைக்கு நேற்று சரக்கு வரவில்லை. இதனால் பல மணி நேரம் காத்து நின்ற மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 
மதியம் கடை திறப்பு
அதேபோல கொழுமம் சோதனைச்சாவடி அருகிலுள்ள டாஸ்மாக் கடையில் மதியம் 2 மணியளவிலேயே விற்பனை தொடங்கியது. இருந்தாலும் நீண்ட நேரம் காத்திருந்த மதுப்பிரியர்கள் உற்சாகமாக மதுவகைகளை வாங்கிச்சென்றனர். ஆனால் மாலை 5 மணிக்கு கடை மூடப்பட்டதால் நீண்ட வரிசையில் காத்திருந்த பலரும் மது கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மதுப்பிரியர்களின் கூட்டம் கலைந்து சென்றதும் மீண்டும் சிறிதளவு கடையைத்திறந்து சிறிது நேரம் மது விற்பனை செய்யப்பட்டது. இந்த தகவல் தெரிந்ததும் மீண்டும் ஒரு சில மதுப்பிரியர்கள் அங்கு திரண்டனர். ஆனால் போலீசார் அவர்களை அருகில் அனுமதிக்காததால் ஏமாற்றமடைந்தனர்.

Next Story