மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் சேவை தொடங்கி 122 ஆண்டுகள் நிறைவு


மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் சேவை தொடங்கி 122 ஆண்டுகள் நிறைவு
x
தினத்தந்தி 15 Jun 2021 10:26 PM IST (Updated: 15 Jun 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் சேவை தொடங்கி 122 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ஊட்டி

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் சேவை தொடங்கி 122 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

மலை ரெயில்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயில் 46.61 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. மலை ரெயில் பயணத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகு, இயற்கை காட்சிகள் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். 

இந்த மலை ரெயிலில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் இடையே பயணம் செய்யும்போது நீர்வீழ்ச்சிகள், குகைகள், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளிட்டவற்றை காணமுடிகி  றது. மலைகளின் இடுக்குகளில் பயணம் செய்யும் இந்த மலை ரெயில் சுற்றுலா பயணிகளிடையே மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

சுற்றுலா பயணிகள்

இதில் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால், தண்டவாளங்களுக்கிடையே பற்சக்கரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதனை பற்றிக்கொண்டே ரெயில் இயங்குகிறது.
நூற்றாண்டை கடந்தும் இந்த மலை ரெயில் பயணத்தக்கு இன்னும் மவுசு குறையவில்லை. 

இந்த ரெயில் பயணம் உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் அதிகம் கவர்ந்துள்ளது. இந்த மலை ரெயில் அவர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளது.  இதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

122 ஆண்டுகள் நிறைவு

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1899-ஆம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி முதன்முதலாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளைம்-குன்னூர் இடையே மலை ரெயில் இயக்கப்பட்டது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் சேவை தொடங்கி 122 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தற்போது கொரோனா பரவல் காரணமாக மலை ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மட்டுமல்லாமல், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் இந்த மலை ரெயில், கடந்த 2005-ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story