ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணி
நீலகிரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ஊட்டி
2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ரூ.2 ஆயிரம் நிவாரணம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் கொரோனா நிவாரண தொகை 2-ம் தவணையாக ரூ.2,000, 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஊட்டியில் கூட்டுறவு நிறுவன ரேஷன் கடையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை ரூ.2,000 ரொக்கம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் 402 ரேஷன் கடைகளில் உள்ள 2 லட்சத்து 18 ஆயிரத்து 195 அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2-ம் தவணையாக ரூ.2,000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தொகுப்பில் சர்க்கரை, கோதுமை மாவு, உப்பு, ரவை உள்பட 14 பொருட்கள் இருக்கிறது.
நடமாடும் வாகனங்கள்
நீலகிரியில் ரூ.8.73 கோடி மதிப்பில் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. நிவாரண தொகை ரூ.2,000 என மொத்தம் ரூ.43.63 கோடி வழங்கப்படுகிறது. இதற்காக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் வாங்கி கொள்ளலாம்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு டோக்கன்கள் வழங்கவில்லை. அங்கு வசிக்கும் பொதுமக்கள் இருக்கும் இடத்துக்கே சென்று நடமாடும் வாகனங்கள் மூலம் நிவாரண தொகை மற்றும் தொகுப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story