திருவண்ணாமலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தும் பூட்டியே கிடக்கும் அறிவியல் பூங்கா


திருவண்ணாமலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தும் பூட்டியே கிடக்கும் அறிவியல் பூங்கா
x
தினத்தந்தி 15 Jun 2021 10:31 PM IST (Updated: 15 Jun 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தும் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் பூட்டியே கிடக்கும் அறிவியல் பூங்காவால் நடைபயிற்சி செய்ய வரும் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

திருவண்ணாமலை

அறிவியல் பூங்கா

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள வேங்கிக்கால் ஏரிக்கரையில் சுமார் ரூ.4 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. தினமும் அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த பூங்காவில் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டு உள்ள நடை பாதையில் ஏராளமானோர் காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் உபகரணங்களை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்து வந்தனர். குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்களை பலர் பயன்படுத்தி வந்தனர்.

பொதுமக்கள் வேதனை

பல்வேறு அறிவியல் உபகரணங்கள், பூங்காவின் திறந்த வெளி அரங்கம் ஆகியவை மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறந்த பொழுது போக்கு இடமாக அறிவியல் பூங்கா அமைந்திருந்தது. 

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவியதையடுத்து இந்த அறிவியல் பூங்கா மீண்டும் ஏப்ரல் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு காலையில் 6 மணி முதல் 9 மணி வரை நகரம் மட்டுமின்றி உள்ளாட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்களில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம் என்ற அரசு தெரிவித்து இருந்தது. 

இருப்பினும் இந்த அறிவியல் பூங்கா தொடர்ந்து மூடியே காணப்படுகிறது. நடைபயிற்சி செல்வதற்காக வரும் மக்களும் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அறிவியல் பூங்காவின் நுழைவு வாயிலில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவியல் பூங்கா தற்போது தனியார் அமைப்பின் பராமரிப்பில் உள்ளது. 
காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் மற்றும் முதியவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் பூங்காவை திறப்பதற்கு சம்பந்தப்பட்ட பூங்கா பராமரிப்பு தனியார் அமைப்பினை அழைத்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், முதல்- அமைச்சர் ஊரடங்கில் தளர்வு அறிவித்தும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பூங்கா பூட்டியே கிடப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story