வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.5¾ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை


வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில்  ஒரே நாளில் ரூ.5¾ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
x
தினத்தந்தி 15 Jun 2021 10:40 PM IST (Updated: 15 Jun 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரேநாளில் ரூ.5 கோடியே 81 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்
டாஸ்மாக் கடைகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் 10-ந் தேதி தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைவு காரணமாக 27 மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் 35 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. கூட்டநெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 10 மணிக்கு முன்பே பெரும்பாலான கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. டோக்கன் முறையில் 5 பேர் வீதம் சமூக இடைவெளியில் மதுபானங்கள் வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

டாஸ்மாக் கடைகளின் முன்பு நீண்ட வரிசையில் நின்று மதுபிரியர்கள் தங்களுக்கு பிடித்த மது, பீர் வகைகளை வாங்கி சந்தோஷத்துடன் சென்றனர். அதனால் வழக்கத்தை விட அதிகமாக விற்பனையானது. மாலை 5 மணி வரை பல கடைகளில் கூட்டம் காணப்பட்டது.

ரூ.5¾ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 116 டாஸ்மாக் கடைகளில் ரூ.3 கோடியே 41 லட்சமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 88 டாஸ்மாக் கடைகளில் ரூ.2 கோடியே 40 லட்சமும் என்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மொத்தம் ரூ.5 கோடியே 81 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்று தீர்ந்தன.

டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக மாலை மற்றும் இரவு வேளையில் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகும். தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக மாலை 5 மணியுடன் கடைகள் மூடப்படுகிறது. அதனால் மதுபானங்கள் விற்பனை எதிர்பார்த்ததைவிட சிறிதளவு குறைந்துள்ளது. வரும் நாட்களில் வழக்கம்போல் மதுவிற்பனையாகும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story