திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 3½ லட்சம் மாணவர்களுக்கு வழங்க 1,980 பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பப்படுகின்றன.
திண்டுக்கல்:
மாவட்டம் முழுவதும் 3½ லட்சம் மாணவர்களுக்கு வழங்க 1,980 பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பப்படுகின்றன.
பள்ளி மாணவர்கள்
தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த ஓராண்டாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனினும் கடந்த ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளது. இதனால் பள்ளிகளை எப்போது திறப்பது என்று அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அதேநேரம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்து இருக்கிறது. அதோடு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களையும் வழங்க உத்தரவிடப்பட்டது.
பாடப்புத்தகங்கள்
இதையொட்டி மாவட்ட வாரியாக பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,980 பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மொத்தம் 3 லட்சம் 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான 9½ லட்சம் பாடப்புத்தகங்கள் கடந்த மாதமே முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்துவிட்டன. மேலும் அவை, அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உடனுக்குடன் வழங்கப்பட உள்ளது. இதற்காக பாடப்புத்தகங்கள் வட்டார கல்வி அலுவலகம் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதையொட்டி முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து மினி லாரிகளில் பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி நடக்கிறது.
Related Tags :
Next Story