ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தேவைப்படாது அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேட்டி
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தேவைப்படாது என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.
கரூர்
மளிகை தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
கரூர் மாவட்டத்தில் ரூ.75.65 கோடி மதிப்பில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 231 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா கால சிறப்பு நிவாரண நிதி தலா ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி படிக்கட்டுத்துறை, காந்திநகர், வேலுச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெற்றது. இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கால அவகாசம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக கொரோனா நிவாரண நிதி ஜூன் மாதம் 3-ந் தேதி குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.4,000 வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் ஜூன் மாதத்திற்கு முன்பே முதல் தவணையாக ரூ.2,000 வழங்கிய முதல்-அமைச்சர் இப்போது இரண்டாம் தவணையாக ரூ.2,000 வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து கரூர் மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணம் செலுத்த ஏற்கனவே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது கால அவகாசத்தை முதல்-அமைச்சர் வழங்கினார். நோய் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததால் 50 சதவீத தொழிலாளர்களுடன் நிறுவனங்கள் செயல்பட தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கால அவகாச நீட்டிப்பு என்பது முதல்-அமைச்சர் முடிவு எடுக்கக்கூடியது. இனி மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் தேவைப்படாது என கருதுகிறேன்.
மக்களை பாதுகாப்பதில்தான்...
டாஸ்மாக் வருவாய்க்கு பதிலாக மாற்று வழி ஏற்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார். சட்டமன்ற தேர்தலிலும், அதற்கு முன் நடந்த மக்களவை தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தார். அப்போது கொரோனா தொற்று உச்சக்கட்டமாக இருந்தது. அந்த நேரத்திலும் மதுபானக்கடைகளை அன்றைய அரசு திறந்தது.
அப்போதெல்லாம் மிகவும் அமைதியாக இருந்தார்கள். ஆனால் இப்போது புதுவகையான வழிமுறைகள் பற்றி கூறுகிறார்கள். கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த நிலையை படிப்படியாக குறைத்து வருகிறார் தமிழக முதல்-அமைச்சர். வேறு எந்த செயல்பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் மக்களை பாதுகாப்பதில்தான் இந்த அரசின் கவனம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் வருவாய் அலுவலர் லியாகத், கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வழங்கல் அலுவலர் தட்சணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story