வல்லநாடு அருகே இரவில் பயங்கரம்: லாரி டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை
வல்லநாடு அருகே பழிக்குப்பழியாக லாரி டிரைவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ஸ்ரீவைகுண்டம்:
நெல்லை அடுத்த வல்லநாடு அருகே உள்ள கீழபுத்தனேரி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55), லாரி டிரைவர். இவர் நேற்று இரவில் மோட்டார் சைக்கிளில் வசவப்பபுரத்தில் இருந்து கீழபுத்தனேரிக்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த பகுதியில் மறைந்து இருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று மாரியப்பனை வழிமறித்து தகராறு செய்தது. பின்னர் அந்த கும்பல் அரிவாளால் மாரியப்பனை சரமாரியாக வெட்டியது. இதில் கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டது.
அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக முறப்பநாடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கொலை செய்யப்பட்ட மாரியப்பன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது. இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் மாரியப்பன் வெளியே வந்துள்ளார். எனவே, இதை அறிந்த எதிர்தரப்பினர் பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். நெல்லை அருகே லாரி டிரைவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட இந்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story