பலத்த காற்று வீசியதால் அரசு பள்ளி மேற்கூரை பறந்தது


பலத்த காற்று வீசியதால் அரசு பள்ளி மேற்கூரை பறந்தது
x
தினத்தந்தி 16 Jun 2021 12:11 AM IST (Updated: 16 Jun 2021 12:11 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக உருளிக்கல் அரசு பள்ளியின் மேற்கூரை காற்றில் பறந்தது. ஆறுகள், அணையில் நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது.

வால்பாறை

வால்பாறையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக உருளிக்கல் அரசு பள்ளியின் மேற்கூரை காற்றில் பறந்தது. ஆறுகள், அணையில் நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. 

4-வது நாளாக மழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் தமிழக-கேரள எல்லையில் இருக்கும் மலைப்பிரதேசமான வால்பாறை யிலும் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த நிலையில்  4-வது நாளாக மழை பெய்தது. 

சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழையாகவும், சில பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், வனப்பகுதியில் உள்ள நீரோடைகள், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

ஆறுகளில் வெள்ளம் 

அதுபோன்று சின்னக்கல்லார் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால், இங்குள்ள அணையின் சுரங்க கால்வாய் வழியாக சோலையார்  அணைக்கு 1,042 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 

இந்த தண்ணீர் வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சுரங்க கால்வாய் வழியாக வெளியேறி வெள்ளமலை ஆற்றில் கலந்து சோலையார் அணைக்கு பாய்ந்து செல்கிறது. 

இதனால் இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதுபோன்று அக்காமலை எஸ்டேட் பகுதியில் இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இங்குள்ள இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

அதுபோன்று அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால், சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதன்படி இந்த அணைக்கு வினாடிக்கு 1,633 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

 இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 58 அடியை எட்டி உள்ளது. 

அதுபோன்று இந்த அணையில் இருந்து மின்நிலையம்-1 வழியாக பரம்பிக்குளம் அணைக்கு 429 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 

கடுமையான குளிர் 

தொடர்ந்து வால்பாறையில் மழை பெய்து வருவதால், கடுமையான குளிர் நிலவி வருகிறது. அத்துடன் பொதுமக்கள் நடமாட்டமும் குறைந்து உள்ளது.

 தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தலையில் பிளாஸ்டிக் பைகளை போட்டபடி தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

மேலும் பல்வேறு எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு மதியம் 2 மணிக்கு வேலையை முடித்துக்கொண்டு செல்லுமாறு அறிவித்து உள்ளனர். 

மேற்கூரை காற்றில் பறந்தது 

வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் எஸ்டேட் கீழ்பிரிவு பகுதியில்  பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. 

இந்த மழை காரணமாக இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஒரு பகுதியில் போடப்பட்ட இரும்பு தகரத்தால் ஆன மேற்கூரை காற்றில் பறந்தது. 

அப்போது அந்தப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. மேலும் அந்த மேற்கூரை அருகில் உள்ள மின்கம்பி மீது விழுந்தது. 

இதனால் மினகம்பி அறுந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மேற்கூரையை அகற்றி, மின்இணைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மழையளவு 

வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டர்) வருமாறு:- 

சின்னக்கல்லாரில் 59 மி.மீ., மேல் நீரார் 59, கீழ் நீரார் 36, வால்பாறை 25, சர்க்கார்பதி 15, தூணக்கடவு 18, பெருவாரிபள்ளம் 16, நவமலை 9, பொள்ளாச்சி 24, நல்லாறு 2, நெகமம் 22, சோலையார் அணை 34 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. 


Next Story