பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பாதிப்பு குறைந்தது


பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பாதிப்பு குறைந்தது
x
தினத்தந்தி 16 Jun 2021 12:17 AM IST (Updated: 16 Jun 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதியில் கொரோனா தினசரி பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்தது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் கொரோனா தினசரி பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்தது.

95 பேருக்கு கொரோனா 

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட ஆனைமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தாலுகா பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கு பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. 

அதன்படி  பொள்ளாச்சி நகரில் 7 பேர், ஆனைமலை ஒன்றியத்தில் 23 பேர், சுல்தான்பேட்டையில் 8 பேர், வால்பாறை தாலுகாவில் 5 பேர், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 19 பேர், தெற்கு ஒன்றியத்தில் 18 பேர், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 15 பேர் என்று மொத்தம் 95 பேருக்கு தொற்று உறுதியானது. 

31 கட்டுப்பாட்டு பகுதிகள் 

இந்த பகுதியில் கொரோனா 2-வது அலையில் 9,867 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 3,700 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 6,167 பேர் அரசு ஆஸ்பத்திரி, கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீடுகளில் 247 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 36 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் தொற்று அதிகம் பாதித்த 31 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. 

காய்ச்சல் பரிசோதனை 

வருவாய் கோட்ட பகுதியில் 18 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் 757 பேர் கலந்துகொண்டனர். அதில் 416 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு பொள்ளாச்சி பகுதியில் கொரோனா தினசரி பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்து உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

58 பேருக்கு பரிசோதனை 

கிணத்துக்கடவு தாலுகாவில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  ஜக்கார்பாளையம், தாசநாயக்கன்பாளையம் ஆகிய ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அதில் அறிகுறி இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட 58 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த முகாமில்  மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story