தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை
திருவெண்ணெய்நல்லூர் அருகே குடிபோதையில் தொழிலாளியை மகன் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.புதுப்பாளையம் ஒட்டியுள்ள அண்ட ராயனூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் புளிமூட்டை என்கிற ரங்கநாதன்(வயது 60). தொழிலாளி. இவருக்கும் அவரது மகன் மணிகண்டன்(35) என்பவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் தந்தை, மகன் இருவரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகின்றது. அப்போது மணிகண்டன் ரங்கநாதனிடம் பணம் கேட்டார். ஆனால் அவரோ தர மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கத்தியால் குத்திகொலை
இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தன்னிடம் இருந்த கத்தியால் ரங்கநாதனின் மார்பில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து ரங்கநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மணிகண்டனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story