டாப்சிலிப் முகாமில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை
டாப்சிலிப் முகாமில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்று ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி
டாப்சிலிப் முகாமில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்று ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்தார்.
கொரோனா பரிசோதனை
சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தொற்று பாதித்த ஒரு பெண் சிங்கம் பரிதாபமாக உயிரிழந்தது.
இதை தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கு அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுத்தி, வரகளியாறு ஆகிய முகாம்களில் பராமரிக்கப்படும் வளர்ப்பு மற்றும் கும்கி யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
யானைகளுக்கு தொற்று இல்லை
வன கால்நடை மருத்துவ குழுவினர் கலீம் உள்பட 28 யானைகளிடம் இருந்து ஆசனவாய், மூக்கு சளி மாதிரியை சேகரித்து உத்தரபிரதேசம் மாநிலம் பரேலியில் உள்ள இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்ததில் யானைகளுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறியதாவது:-
தடுப்பு நடவடிக்கை
கோழிகமுத்தி, வரகளியாறு முகாமில் பராமரிக்கப்படும் யானை களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை பெறப்பட்டு உள்ளது.
தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் வழக்கமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடரும்.
மேலும் ஏற்கனவே தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பாகன் களுக்கும் கையுறை, முகக்கவசம், சானிடைசர் (கிருமி நாசினி மருந்து) கொடுக்கப்பட்டு உள்ளது.
யானைகளுக்கு உணவு தயாரிப்பதற்கு முன் கிருமி நாசினி மருந்து கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். கையுறை, முகக்கவசம் அணிய வேண்டும்.
கிருமி நாசினி தெளிப்பு
இதே முறையை யானைகளுக்கு உணவு கொடுக்கும் போதும் கடைப் பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தி உள்ளதால், வழக்கமாக யானைகள் நிறுத்தும் இடைவெளியை விட தற்போது கூடுதலாக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது.
வாரத்தில் ஒரு நாள் யானைகளுக்கு ஏதாவது தொந்தரவு உள்ளதா? என்பதை அறிய வன கால்நடை டாக்டர்களை கொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
முகாமில் யானைகள் நிறுத்தும் இடம் உள்பட அனைத்து இடங்களிலும் தினமும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story