ரூ.4¾ கோடிக்கு மது விற்பனை


ரூ.4¾ கோடிக்கு  மது விற்பனை
x
தினத்தந்தி 16 Jun 2021 12:33 AM IST (Updated: 16 Jun 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.4¾ கோடிக்கு மது விற்பனையானது.

விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கினால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் நோய் பரவல் கட்டுக்குள் வராத  மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பதற்கு அரசு அனுமதியளித்தது.
அதன்படி 35 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 123 டாஸ்மாக் கடைகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 104 டாஸ்மாக் கடைகள் என மொத்தம்  227 டாஸ்மாக் கடைகள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்பட்டு மது விற்பனை நடந்தது.

கூட்டம் குறைவு

 கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு தளர்வின்போது 2 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் ரூ.5¾ கோடிக்கு மது விற்பனை நடந்தது. அதுபோல் நேற்று முன்தினமும் மது விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் சாதாரண நாட்களைப்போன்று குறைவாகவே இருந்தது.
இதற்கு, பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் கடந்த வாரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மதுபிரியர்கள் இங்கிருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு படையெடுத்துச்சென்று அங்குள்ள கடைகளில் மதுபான வகைகளை மொத்தம், மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து விட்டதால் மதுபிரியர்களின் கூட்டம் குறைந்துள்ளதாக காரணம் சொல்லப்பட்டது.
ரூ.4¾ கோடிக்கு மது விற்பனை
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் பிராந்தி, விஸ்கி மதுபான வகைகள் 4,999 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 4,287 அட்டைப்பெட்டிகளும் விற்று தீர்ந்தன. இதன் மூலம் ரூ.4 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரத்து 930-க்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளது. இது சாதாரண நாட்களில் விற்பனையாகக்கூடிய சராசரியான விற்பனை தொகை என்றும் எதிர்பார்த்த அளவிற்கு கூடுதலாக விற்பனை ஆகவில்லை என்றும் டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story