கொரோனா நிவாரணம்: 2-வது தவணை ரூ.2 ஆயிரம், மளிகை தொகுப்பு 1,224 ரேஷன் கடைகளில் வினியோகம் தொடங்கியது
திருச்சி மாவட்டத்தில் கொரோனா நிவாரணமாக 2-வது தவணை ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை தொகுப்பு ரேஷன் கடைகளில் வினியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் கொரோனா நிவாரணமாக 2-வது தவணை ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை தொகுப்பு ரேஷன் கடைகளில் வினியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
2-வது தவணை
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி கொரோனா நோய்த் தாக்கத்தை தடுக்கும் விதமாக, பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்கும் பொருட்டு நிவாரணமாக முதல் தவணைத்தொகை ரூ.2 ஆயிரம் ஏற்கனவே ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு விட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது நேற்று முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் 2-ம் தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்ககும் பணி அனைத்து ரேஷன் கடைகளிலும் தொடங்கியது.
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 கடைகளுக்கு உட்பட்ட 8,11,990 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இவை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடையிலும் அவற்றை பெறும் வகையில் அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் ஏற்கனவே டோக்கன் வினியோகிக்கப்பட்டு விட்டது.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 2-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தனர். மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிக்குமார், திருநாவுக்கரசர் எம்.பி., இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் அருளரசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 ரேஷன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை தொகுப்பு வழங்கப்பட்டன.
முசிறி, லால்குடி
தா.பேட்டை அருகே வாளசிராமணி, வேலம்பட்டி, ஊரக்கரை உள்ளிட்ட பல்வேறு ரேஷன் கடைகளில் தியாகராஜன் எம்.எல்.ஏ.வும், முசிறி அருகே ஜெம்புநாதபுரம், மங்களம், துலையாநத்தம், வாழவந்தி, வெங்கங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகளில் கதிரவன் எம்.எல்.ஏ.வும், துறையூா் மலையப்பன் சாலையில் உள்ள ரேஷன்கடைகளில் ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ.வும் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு 2-வது தவணை கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
இதுபோல் லால்குடி அருகே வாளாடி, நெருஞ்சிலகுடி, புள்ளம்பாடி, சரடமங்கலம் கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 2-வது தவணை கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பை சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார். ஒன்றிய தலைவா்கள், கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் தி.மு.க. ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை தொகுப்பு பெற வந்த பொதுமக்கள் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு கொண்டு வந்து சமூக விலகலை கடைப்பிடித்தும், நீண்ட வரிசையில் நின்றும், பணம்-மளிகை தொகுப்பை பெற்று சென்றனர். அவற்றை பெற்ற பெண்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இம்மாதம் முழுவதும் இவை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரேஷன் கடைகளில் பணம் மற்றும் மளிகை தொகுப்பு வழங்குவதில் பிரச்சினை குறித்த புகார்கள் ஏதும் இருப்பின், அதனை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்களிடமும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story