சிவகிரி அருகே சமூக வலைதளத்தில் மான் கொம்பு விற்பனை; 2 பேர் கைது


சிவகிரி அருகே  சமூக வலைதளத்தில் மான் கொம்பு விற்பனை; 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 1:15 AM IST (Updated: 16 Jun 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே சமூக வலைதளத்தில் மான் கொம்பு விற்பனை என விளம்பரம் செய்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சிவகிரி:
சிவகிரி அருகே சமூக வலைதளத்தில் மான் கொம்பு விற்பனை என விளம்பரம் செய்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 

மான் கொம்பு

சிவகிரி அருகே வாசுதேவநல்லூர் செண்பகக்கால் ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்துல்லா ரியாஸ் (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது என்ற சலீம் (27). இவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.

நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாசுதேவநல்லூருக்கு மேற்கே பெரியகுளம் கண்மாய் பகுதிக்கு நடைப்பயிற்சிக்கு சென்றனர். அங்கு குளத்தின் கரையில் மான் கொம்புகள் கிடைத்ததாக எடுத்துக் கொண்டு வாசுதேவநல்லூருக்கு வந்தனர். இதனை தொடர்ந்து மான்கொம்பு விற்பனைக்கு கிடைக்கும் என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளனர்.

சுற்றி வளைத்தனர்

தகவல் அறிந்ததும் சிவகிரி வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் சிவகிரி வடக்குப்பிரிவு வனவர் மகேந்திரன், வனக்காப்பாளர்கள் இம்மானுவேல், சுதாகர், பாரதிகண்ணன் மற்றும் உயிரின குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஆகியோர் முகமது அப்துல்லா ரியாஸ், சலீம் ஆகியோரை தொடர்பு கொண்டனர்.

சிவகிரி அருகே உள்ளார் தளவாய்புரத்திற்கு மேற்கே ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வைத்து நாங்கள் மான் கொம்பை விலைக்கு வாங்கி கொள்கிறோம் என வனத்துறையினர் கூறியுள்ளனர். அதன் பேரில் 2 பேரும் மான் கொம்புடன் அந்த இடத்திற்கு சென்றனர்.

கைது-அபராதம்

அப்போது அங்கு மறைந்திருந்த வனத்துறை அதிகாரிகள் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மான் கொம்பையும் கைப்பற்றினர்.

பின்னர் இருவரையும் சிவகிரி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில் 2 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Next Story