கும்பகோணத்தில் இருந்து அரியலூருக்கு ஆற்றை கடந்து சென்று மதுபாட்டில்களை வாங்கி வரும் மதுப்பிரியர்கள் தடுக்க முடியாமல் போலீசார் திண்டாட்டம்
கும்பகோணத்தில் இருந்து அரியலூருக்கு ஆற்றை கடந்து சென்று மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கி வருகின்றனர். இதை தடுக்க முடியாமல் போலீசார் திண்டாடி வருகிறார்கள்.
கும்பகோணம்:-
கும்பகோணத்தில் இருந்து அரியலூருக்கு ஆற்றை கடந்து சென்று மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கி வருகின்றனர். இதை தடுக்க முடியாமல் போலீசார் திண்டாடி வருகிறார்கள்.
மதுக்கடைகள்
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் (மே) 10-ந் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் ஒரு மாதத்துக்கு மேலாக மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். தமிழகத்தில் மது கிடைக்காத நிலையில் கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பதும், சாராயம் காய்ச்சி விற்பதும் அதிகரித்தது.
நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ள 27 மாவட்டங்களில் கூடுதலாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
அரியலூர் எல்லை
கொரோனா குறையாத தஞ்சை, திருவாரூர், நாகை, கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இந்த மாவட்டங்களை சேர்ந்த மதுப்பிரியர்கள் அருகில் மது விற்பனை நடைபெறும் மாவட்டங்களுக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நீலத்தநல்லூர், அணைக்கரை ஆகிய பகுதிகள் தஞ்சை- அரியலூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்து உள்ளன. இங்கிருந்து அரியலூர் மாவட்டத்துக்கு கொள்ளிடம் ஆற்றை கடந்து செல்ல முடியும்.
வாகன சோதனை
தற்போது அரியலூர் மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், கும்பகோணம் பகுதிைய சேர்ந்த மதுப்பிரியர்கள் அணைக்கரை, நீலத்தநல்லூர் வழியாக அருகில் உள்ள அரியலூர் மாவட்ட பகுதிக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர். சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.
ஆற்றை கடந்து...
மதுப்பிரியர்கள் போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக கொள்ளிடம் ஆற்றை கடந்து அரியலூர் பகுதிக்கு செல்வதும் அதிகரித்துள்ளது. அவ்வாறு ஆற்றை கடந்து சென்று மதுவாங்கி வருபவர்களை தடுக்க முடியாமல் போலீசார் திண்டாடி வருகின்றனர்.
Related Tags :
Next Story