மாளிகைமேட்டில் அகழாய்வு பணிகள் மீண்டும் தொடக்கம்
மாளிகைமேட்டில் அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியது.
மீன்சுருட்டி:
அகழாய்வு பணிகள்
தமிழக தொல்லியல் துறை மூலம் 2020-21-ம் ஆண்டிற்கான அகழாய்வு பணிகள் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில், கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்கோட்டையை அடுத்துள்ள மாளிகைமேடு பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட ஆய்வு பணிகள் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் மாளிகைமேட்டில் அகழாய்வு பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தொல்லியல் துறை சார்பில் கடந்த மாதம் 10-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி பணிகள் நிறுத்தப்பட்டன.
மீண்டும் தொடங்கியது
இந்நிலையில் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கீழடி, கொற்கை போன்ற இடங்களில் அகழாய்வு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன. அதன்படி மாளிகைமேடு பகுதியிலும் அகழாய்வு பணிகள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் குறைந்தபட்ச தொழிலாளர்களைக் கொண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அகழாய்வு பணிகள் நடைபெறுவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சோழர்களின் வரலாற்று சிறப்புகளை...
சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதால், பணிகளை விரைந்து முடித்து சோழர்களின் வரலாற்று சிறப்புகளை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் அகழாய்வு நடைபெறும் இடங்கள் திறந்தவெளியாக இருக்கின்றன. இனிவரும் காலம் மழைக்காலம் என்பதால் அகழாய்வு நடைபெறும் இடங்களில் மழைநீர் தேங்காத வகையில் பாதுகாக்க உரிய முன்னேற்பாடு பணிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story