6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சாராய ஊறல்- மணல் கடத்தல் வழக்குகளில் கைதான 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஜெயங்கொண்டம்:
கைது
அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆரோக்கியசாமி மகன் வேளாங்கண்ணி ராபர்ட்(வயது 34), செல்லையா மகன் பாலகுமார்(22) ஆகியோர் சாராய ஊறல் போட்டது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒருசில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களுடன், தவறுதலாக அவர்கள் 2 பேரும் விடுவிக்கப்பட்டனர். பின்னர் வி.கைகாட்டியில் அவர்களை போலீசார் கைது செய்து அரியலூர் சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இதேபோல் மீன்சுருட்டி அருகே உள்ள ராமதேவநல்லூரை சேர்ந்த கார்த்திக்(41), சுத்துகுளம் கிராமத்தை சேர்ந்த விவேக்(30) ஆகியோர் சாராய ஊறல் போட்டிருந்தது தொடர்பான வழக்கில் மீன்சுருட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஆண்டிமடம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ரகுபதி(31) சாராய ஊறல் போட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர்கள் 5 பேரும் தொடர்ச்சியாக இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். அதன்படி 5 மீதும் நடவடிக்கை எடுக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார்.
மத்திய சிறையில் அடைப்பு
இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடத்தை அடுத்த நெட்டலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பாரதி, அடிக்கடி மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தொடர்பாக ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார், அவர்கள் 6 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story