இசக்கி, பூதத்தான் சன்னதிகளை மீண்டும் அமைக்க வேண்டும்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இசக்கி, பூதத்தான் சன்னதிகளை மீண்டும் அமைக்க வேண்டும் என தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இசக்கி, பூதத்தான் சன்னதிகளை மீண்டும் அமைக்க வேண்டும் என தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது.
கோவிலில் தீ விபத்து
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2 - ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்க குமரி மாவட்ட கோவில்கள் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த ஜோதிடர் ஸ்ரீநாத் மற்றும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் நேற்றுமுன்தினம் மண்டைக்காடு கோவிலுக்கு வந்து தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியை தொடங்கினர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் கூறப்பட்ட தகவல் வருமாறு:-
தங்க தேர்
தங்க தேர் கோவிலுக்கு கிடைத்தும் முறையாக பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. கோவிலுக்குள் 2 கிணறுகள் மூடப்பட்டுள்ளது. அந்த கிணறுகளை தோண்டி சூரிய ஒளி விழும்படி அமைக்க வேண்டும். அந்த கிணற்றில் இருந்துதான் கோவில் பயன்பாட்டிற்கு நீர் எடுக்க வேண்டும்.
கோவிலுக்கு சொந்தமான குளம் பாழ்பட்டு உள்ளது. அதை சீரமைத்து, அதில் மேல் சாந்திகள் குளித்துவிட்டுதான் கோவில் பூஜைகளை செய்ய வேண்டும். பக்தர்கள் உள் பிரகாரத்தினுள் செல்லக்கூடாது. கோவிலை பொறுத்த அளவில் பக்தர்கள் எங்கு நின்று தரிசித்தாலும் அம்மன் அருள் கிடைக்கும். கோவிலை புதிதாக கட்ட வேண்டும். .
ராணிக்கு அழைப்பு
மாசிக்கொடையின்போது திருவனந்தபுரம் அரண்மனை ராணிக்கு பட்டுடன் அழைப்பு விடுக்க வேண்டும். கொடையின்போது அம்மன் கதையை சொல்லும் வில்லுப்பாட்டு, புல்லுவன் பாட்டு பாட வேண்டும். கோவிலில் முன்பு இசக்கி, பூதத்தான், பைரவர் ஆகியோருக்கு தனி சன்னதி இருந்தது. இப்போது பைரவர் சன்னதி மட்டும் உள்ளது. இசக்கி, பூதத்தான் சன்னதிகள் மீண்டும் அமைக்க வேண்டும்.
கோவில் முன்பு பக்தர்களை ஒழுங்கு படுத்தும் தடுப்பு வேலியை மாற்றியமைக்க வேண்டும். யானை ஊர்வலத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். யானை மீது கொண்டு வரப்படும் சந்தனம் சுத்தமானதாக இருக்க வேண்டும். முதல் பரிகாரமாக உடனே மிருத்யுஞ்சய ஹோமம் நடத்த வேண்டும். 2-வதாக திருவனந்தபுரம் அரண்மனை ராணிக்கு பட்டு கொண்டு கொடுத்து பரிகார பூஜை செய்ய உத்தரவு பெற வேண்டும்.
பிடிபணம் கொடுக்க வேண்டும்
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில், திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவில், நாகர்கோவில் நாகராஜ கோவில், மண்டைக்காடு பால்குளம் கண்டன் சாஸ்தா கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராம கோவில்களுக்கும் பிடி பணம் கொடுத்து பூஜைகள் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் கோவிலில் பரிகார பூஜைகளான மகா கணபதி ஹோமம், மகா சுதர்சனம் ஹோமம், தில ஹோமம் மற்றும் பகவதி பூஜைகள் செய்ய வேண்டும். இந்த பரிகார பூஜைகளை உடனே செய்ய வேண்டும்.
இவ்வாறு தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதில் தேவசம் இணை ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், ஜீவானந்தம், மராமத்து பொறியாளர் அய்யப்பன், மாவட்ட இந்து கோவில்களின் கூட்டமைப்பு, இந்து முன்னணி, ஹைந்தவ (இந்து) சேவா சங்கம், தேவி சேவா சங்கம், பெரிய சக்கர தீவெட்டி முன்னேற்றக்குழு ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story