மேச்சேரி அருகே கொரோனா நிவாரணத்தொகை வழங்குவதில் தி.மு.க.-பா.ம.க.வினர் மோதல்- 7 பேர் காயம்
மேச்சேரி அருகே கொரோனா நிவாரணத்தொகை வழங்குவதில் தி.மு.க.-பா.ம.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
மேச்சேரி:
மேச்சேரி அருகே கொரோனா நிவாரணத்தொகை வழங்குவதில் தி.மு.க.-பா.ம.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
பா.ம.க.வினர் எதிர்ப்பு
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2-வது தவணையாக கொரோனா நிவாரணத்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதன்படி சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தெத்திகிரிப்பட்டி ஊராட்சி ஆரியக்கவுண்டனூர் பகுதி நேர ரேஷன் கடைக்கு நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருட்களை வழங்க மேச்சேரி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சீனிவாசப்பெருமாள் தலைமையில் தி.மு.க.வினர் சென்றனர்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பா.ம.க.வினர், சதாசிவம் எம்.எல்.ஏ. வந்த பின்பு தான் பொருட்கள் கொடுக்க வேண்டும் என கூறினர். இதற்காக தி.மு.க.வினர் சிறிது நேரம் காத்திருந்தனர். ஆனால் பா.ம.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. சதாசிவம் வர தாமதம் ஆனதால், நாங்கள் கொடுத்து விட்டுச் செல்கிறோம் என கூறி தி.மு.க.வினர் ரேஷன் கடையை திறக்க முயன்றனர். இதற்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மோதல்-7 பேர் காயம்
இதைத்தொடர்ந்து தி.மு.க.-பா.ம.க.வினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு மோதல் உருவானது. மேலும் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.
இது பற்றி தகவல் அறிந்ததும் அங்கு மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் உள்பட ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்த மோதலில் தி.மு.க.வை சேர்ந்த 4 பேரும், பா.ம.க.வை சேர்ந்த 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் 7 பேரும் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த பிரச்சினையால் அந்த ரேஷன் கடையில் நிவாரணத்தொகை, மளிகை பொருட்கள் வழங்கப்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் பா.ம.க.வை சேர்ந்து எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம் (மேட்டூர்), அருள் (சேலம் மேற்கு) மற்றும் பா.ம.க.வினர் ஆரியக்கவுண்டனூர் ரேஷன் கடைக்கு வந்தனர். அவர்கள் ரேஷன் கடை ஊழியர்களே பொருட்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் செல்போனில் கூட்டுறவு துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நாளை (இன்று) நிவாரணத்தொகை, மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து 2 தரப்பினரும் மேச்சேரி போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக நேற்று காலை முதல் மாலை வரை அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story