மருத்துவ கழிவுகளை சுத்திகரிப்பு நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் - கலெக்டர் தகவல்
மருத்துவ கழிவுகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதித்துள்ள கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர்,
சுற்றுச்சூழல் வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம் மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து சுத்திகரித்து அகற்றுவதற்காக மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016 அறிக்கை செய்துள்ளது. இந்த விதிகளை பின்பற்றுவதன் மூலம் மருத்துவ கழிவுகளின் உற்பத்தியையும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தையும் குறைத்திட இயலும். இந்த விதிகளை அமல்படுத்த செயல்படுத்துவதற்கான அதிகாரம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் உள்ளது. இந்த விதிகளின்படி ஆஸ்பத்திரிகளில் இருந்து உருவாகும் மருத்துவ கழிவுகள் முறையாக பிரித்து, சேமித்து, பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒப்படைக்க வேண்டும்.
மேலும் தொற்று ஏற்படக் கூடிய மருத்துவ கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மிகாமல் சேமித்தல் கூடாது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மருத்துவ கழிவுகளை முறையாக கையாளுவதற்காக அனைத்து ஆஸ்பத்திரிகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு ஏற்கனவே பல்வேறு அறிவுரைகள் வழங்கி உள்ளது.
இருப்பினும் நீர்நிலைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் சட்டவிரோதமாக கொட்டுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது.
தற்போது நிலவிவரும் கொரோனா தொற்று சூழலில் மருத்துவ கழிவுகளை முறை இல்லாமல் திறந்த வெளியில் கொட்டுவது, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அனைத்து ஆஸ்பத்திரிகள், கொரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து அந்தந்த பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதித்துள்ள பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவது தவிர்க்க உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விதிகளை பின்பற்றாமல் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை செய்கிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story