மும்பை, ஐதராபாத்தில் இருந்து 6 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன
மும்பை, ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் ஒரே நாளில் 6 லட்சத்து 16 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் நேற்று சென்னை வந்தடைந்தன.
ஆலந்தூர்,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்- அமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உள்ளாா்.
இந்த நிலையில் திட்டத்தை தீவிரப்படுத்துவதற்காக கூடுதல் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசும் தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசும் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து தன்னிச்சையாக கொள்முதல் செய்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், சிறப்பு முகாமில் அதிக அளவில் கூட்டம் ஏற்படுகிறது. இதனால் தடுப்பூசிகள் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்திற்கு இதுவரை மத்திய தொகுப்பின் மூலமும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் வழியாகவும் மொத்தம் 1 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரம் கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளும் வந்துள்ளன.
இதுவரை தமிழகத்தில் சுமார் 1 கோடியே 5 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூன் மாதத்தில் 42 லட்சத்து 58 ஆயிரம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
அந்த வகையில், நேற்று காலை தெலுங்கானா மாநிலம் ஜதராபாத்தில் இருந்து சரக்கு விமானத்தில் 25 பெட்டிகளில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 20 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தன. அதேபோல் காலை 11 மணிக்கு மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து விமானத்தில் தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட்ட 42 பெட்டிகளில அடைக்கப்பட்ட 4 லட்சத்து 97 ஆயிரத்து 640 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் வந்தன.
அதைத்தொடர்ந்து, மொத்தம் 6 லட்சத்து 16 ஆயிரத்து 660 தடுப்பூசிகள் விமான நிலையத்தில் இருந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. தமிழகம் வந்தடைந்த தடுப்பூசிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story