காஞ்சீபுரம் கோவில் நிலத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் தனியார் பள்ளியை அறநிலையத்துறை ஏற்று நடத்தும்
காஞ்சீபுரம் கோவில் நிலத்தில் இயங்கும் கீழ்ப்பாக்கம் தனியார் பள்ளியை அறநிலையத்துறை ஏற்று நடத்தும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை,
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குத்தகை அடிப்படையில் கடந்த 1969-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதியில் இருந்து செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியின் குத்தகை காலம் நிறைவடைந்ததை அடுத்து மேற்கொண்டு வாடகை செலுத்த முடியாத காரணத்தினால் பள்ளியை இழுத்து மூடுவதாக நிர்வாகம் அறிவித்தது.
இதனால் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இறுதியில் அறநிலையத்துறை அமைச்சரிடம் மாணவர்கள் நலன் கருதி பள்ளியை தொடர்ந்து நடத்த பெற்றோர்கள், மாணவர்கள் முறையிட்டனர்.
இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்துவிட்டு, முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு 5 நிமிடத்திலேயே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த பள்ளியை அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என்று அறிவித்தார்.
இந்தநிலையில், பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு மாணவிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் மற்றும் அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியை அறநிலையத்துறை நடத்தும் என்பதற்கு அச்சாரமாக பள்ளியின் சாவியை அமைச்சர், பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.நிர்மலா கவுரியிடம் வழங்கினார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து பேசினர். காஞ்சீபுரம் இணை கமிஷனர் பெ.ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை ஜெயந்தி வரதராஜன் நன்றி கூறினார்.
கூட்டம் நிறைவடைந்ததும், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நடந்து வந்த பள்ளியில் 750 மாணவர்கள் பயின்று வந்தது குறித்து, முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவர்களின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இப்பள்ளியை இந்து அறநிலையத்துறையே ஏற்று நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி துறை அலுவலர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திலும் அறநிலையத்துறை இந்த பள்ளியை ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தனியார் பள்ளிகளை விட இந்த பள்ளி அதிக தரத்தில் நடத்தப்படும். ஏற்கனவே மாணவர்களிடம் என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ அதே கட்டணம் செலுத்தினால் போதும். கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. பள்ளியில் என்ன மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறதோ அதே நடைமுறைகள் தொடரும்.
பள்ளியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படவும், தேவைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். தற்போது படிப்பதை விட கூடுதலான மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயனடையும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அவர்களுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story