ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி


ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 16 Jun 2021 6:51 PM IST (Updated: 16 Jun 2021 6:51 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நடந்த விபத்தில் பலியான ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் கம்பத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கம்பம்: 

தேனி மாவட்டம் கம்பம் சின்ன வாய்க்கால் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரபாகரன் (வயது 33).  இவர் புதுடெல்லி ராணுவ பிரிவில் ஹவில் தாராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு லோகிதா ஸ்ரீ (8), யுகாசினி (3) என்ற மகள்கள் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் பிரபாகரன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். 

அப்போது சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று முன் தினம் மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. 


அங்கு இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தேனி மாவட்டம் கம்பத்துக்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு வந்தது. அங்கு வருவாய் ஆய்வாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் நசீம்கான், கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி ஆகியோர் முன்னிலையில் பிரபாகரனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அவருடைய உடலை பார்த்து பெற்றோர், அவரது மனைவி மற்றும் மகள்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவருடைய உடலுக்கு உறவினர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். 


இதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு அவருடைய உடல் கம்பம்-சுருளிப்பட்டி சாலையில் உள்ள தொட்டன்மன்துறை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

அங்கு ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவர் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடிக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்பு தேசியக்கொடி அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. பின்னர் மயானத்தில் பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

Next Story