3-வது அலையை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கலெக்டர் அமர்குஷ்வாஹா பேச்சு


3-வது அலையை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கலெக்டர் அமர்குஷ்வாஹா பேச்சு
x
தினத்தந்தி 16 Jun 2021 7:38 PM IST (Updated: 16 Jun 2021 7:38 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறி்னார்.

திருப்பத்தூர்

ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா 3-வது அலையினை எதிர்கொள்ள செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கொரோனா இரண்டாவது அலை தற்போது குறைந்து வருகிறது. 3-வது அலையினை எதிர்கொள்ள  முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள 208 கிராம ஊராட்சி அளவில், ஊராட்சி செயலாளர்கள், கிராம செவிலியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை காவலர்கள், ஒரு காவலர் மற்றும் ஒரு தன்னார்வலர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயலாளர் தலைமையில் சுகாதார அலுவலர் மற்றும் மற்றும் ஆய்வாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என ஒரு வார்டுக்கு ஒரு குழு  அமைத்திட வேண்டும்.

அவர்கள் கிராமம் மற்றும் நகர பகுதிகளில் தினமும் காலை 7.30 மணிக்கு கூடி தங்கள் பகுதிகளில் கொரோனாவால் எவ்வளவு நபர்கள் பாதிப்படைந்துள்ளனர் என வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் குறித்து ஆய்வு செய்து காலை 10 மணிக்குள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு அறிக்கையை சமர்பிக்க வேண்டும். 

ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

அறிக்கையின் அடிப்படையில் மருத்துவ குழுவினர் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உடனடியாக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிப்பின் தன்மைகேற்ப வீடுகளில் தனிமைப்படுத்துதல், சிறப்பு மையங்களில் சிகிச்சை அளித்தல் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், தடுப்பூசி செலுத்துதல் குறித்து முடிவெடுத்து சிகிச்சைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். 

இந்த நடவடிக்கைகள் வருகிற 20-ந் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும். தற்போது தொற்று குறைந்திருந்தாலும் கொரோனா 3-வது அலையினை எதிர்கொள்ள இப்பணியினை உடனடியாக செயல்படுத்திட வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சி அளவில் உள்ள அரசு பள்ளிகளை தற்காலிகமாக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story