தூத்துக்குடியில் ஒரே நாளில் 180 டன் மீன்கள் பிடிபட்டன


தூத்துக்குடியில் ஒரே நாளில் 180 டன் மீன்கள் பிடிபட்டன
x
தினத்தந்தி 16 Jun 2021 7:45 PM IST (Updated: 16 Jun 2021 7:45 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஒரே நாளில் 180 டன் மீன்கள் பிடிபட்டன

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு விசைப்படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் வலையில் ஒரே நாளில் 180 டன் மீன்கள் பிடிபட்டன. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தடைக்காலம் முடிவு
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், தருவைகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளில் 420 விசைப்படகுகள் கடந்த 61 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளில் ஏற்பட்டுள்ள சிறு, சிறு பழுதுகளை சரி செய்தல், சேதம் அடைந்த வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
180 டன் மீன்கள் பிடிபட்டன
இந்த நிலையில் தடைக்காலம் முடிவடைந்ததை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து சுழற்சி முறையில் 120 படகுகள் கடலுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி 102 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். பின்னர் இரவு 7 மணிக்கு மேல் ஒவ்வொரு படகாக கரைக்கு வரத் தொடங்கின.
மீனவர்கள் வலையில் பெரிய மீன்கள் அதிக அளவில் பிடிபட்டு இருந்தன. சீலா, பாறை, ஊளி, விளமீன், நெத்திலி, இறால், கணவாய் உள்ளிட்ட மீன்கள் அதிகமாக பிடிபட்டன. ஒரே நாளில் மொத்தம் சுமார் 180 டன் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனைக்காக வந்தன.
இந்த மீன்களை வாங்குவதற்காக வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் ஏராளமான மீன்களை விற்பனைக்காக வாங்கி சென்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீன்கள் தனித்தனி இடங்களில் வைத்து ஏலம் விடப்பட்டன. மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
மீனவர்கள் மகிழ்ச்சி
தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற முதல் நாளிலேயே அதிக அளவில் மீன்கள் பிடிபட்டதால் மீனவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மீனவர் ஜான்சன் கூறியதாவது:-
நாங்கள் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்று திரும்பி உள்ளோம். ஆண்டவன் புண்ணியத்தில் நிறைய மீன்கள் கிடைத்து உள்ளது. மீனுக்கும் நல்ல விலை கிடைத்து உள்ளது. இதனால் மகிழ்ச்சியாக உள்ளோம். கருஊளி, அயலை, சாளை, காரல் உள்ளிட்ட மீன்கள் அதிகம் பிடிபட்டு உள்ளன.
நாங்கள் அரசின் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து, கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து வருகிறோம். தொடர்ந்து அரசின் வழிகாட்டுதலின்படி மீன்பிடி தொழிலில் ஈடுபட உள்ளோம். எங்களை தொடர்ந்து மீன்பிடிக்க அரசு அனுமதிக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story