நிலக்கோட்டை அருகே பெரியாறு கால்வாயில் மூழ்கி சிறுவன் பலி
நிலக்கோட்டை அருகே பெரியாறு கால்வாயில் மூழ்கி 15 வயது சிறுவன் பரிதாபமாக இறந்துபோனான்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே பெரியாறு கால்வாயில் மூழ்கி 15 வயது சிறுவன் பரிதாபமாக இறந்துபோனான்.
ஆண்டிப்பட்டி சிறுவன்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் பொம்முராசு. இவரது மகன் மோகனகண்ணன் (வயது 15). இவன் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தான். இந்தநிலையில் மோகனகண்ணன், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சி.புதூரில் வசிக்கும் தனது உறவினரான சண்முகம் வீட்டிற்கு நேற்று காலை சென்றான். உடன் தனது நண்பர்களான அம்மாபட்டியை சேர்ந்த சபரி, சந்துரு, திருக்குமரன் ஆகிய 3 பேரையும் அழைத்து சென்றான்.
அப்போது சி.புதூர் அருகே செல்லும் பெரியாறு கால்வாயில் மோகனகண்ணன், தனது நண்பர்களுடன் குளிக்க சென்றான். அங்கு அவர்கள் 4 பேரும் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று மோகனகண்ணன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான். இதனால் அவரது நண்பர்கள் அபயகுரல் எழுப்பினர். உடனே இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கி பலி
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கால்வாயில் அடித்து செல்லப்பட்ட மோகனகண்ணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சி.புதூரில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் கால்வாயில் மூழ்கியபடி மோகனகண்ணன் இறந்து கிடந்தான்.
இதையடுத்து அவனது உடலை தீயணைப்பு படைவீரர்கள் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் தேவதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
உறவினர் வீட்டிற்கு வந்து கால்வாயில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சி.புதூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story