ஒட்டன்சத்திரம் அருகே ஸ்கூட்டர் தீவைத்து எரிப்பு
ஒட்டன்சத்திரம் அருகே ஸ்கூட்டரை மர்மநபர்கள் தீவைத்து எரித்தனர்.
சத்திரப்பட்டி:
ஒட்டன்சத்திரம் வினோபாநகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 44). இவர், தேவர் பேரவை மாநில துணைத்தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர், ஒட்டன்சத்திரம் அருகே கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றார்.
பின்னர் அங்கிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி அவர் புறப்பட்டார். கொல்லப்பட்டியில் இருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் அவரது ஸ்கூட்டர் பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது.
இதையடுத்து அந்த ஸ்கூட்டரை சாலையோரம் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை தனது ஸ்கூட்டரை எடுப்பதற்காக ஈஸ்வரன் சென்றார். அப்போது அவர் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டர் எரிந்த நிலையில் கிடந்தது. அதற்கு மர்மநபர்கள் தீவைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story