திருவண்ணாமலையில் ரூ.1¾ கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள். அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திருவண்ணாமலையில் ரூ.1¾ கோடியில் நடைபெற உள்ள சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வுசெய்தார்.
திருவண்ணாமலை
சாலை மேம்பாட்டு பணிகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கோவில் பின்புறம் உள்ள மலை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் பவுர்ணமி, தீபத்திருவிழா நடைபெறும் நாட்களில் கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் உள்ள 4 முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விபத்துக்களை தவிர்க்கவும், கிரிவலப் பாதையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பாக செல்வதற்கும், நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.1¾ கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.
அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
இதில் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே ரூ.50 லட்சம் மதிப்பில் இணைப்பு சாலை சந்திப்பு மேம்படுத்துதல் மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதேபோல் மத்திய பஸ் நிலையம் அருகில் அறிவொளி பூங்கா எதிரில் ரூ.45 லட்சம் மதிப்பிலும், பே கோபுரம் மற்றும் செங்கம் சாலை சந்திப்பு பகுதியில் ரமணாஸ்ரமம் அருகே ரூ.48 லட்சம் மதிப்பிலும், கிரிவலப்பாதையில் காஞ்சி சாலை சந்திக்கும் இடத்தில் அபய மண்டபம் அருகே ரூ.32 லட்சம் மதிப்பிலும் ரவுண்டானா அமைய உள்ளது.
இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை கோட்டப் பொறியாளர் முரளி, தி.மு.க. மருத்துவர் அணி மாநில துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகரமன்றத் தலைவர் ஸ்ரீதரன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் மற்றும் அரசு அலுவலர்கள், நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story